மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடிக்கும் அபாயம்: ஆயுத குழுக்களின் தாக்குதலால் 4 பேர் பலி; பொதுமக்கள் கடும் பீதி

இந்த கொடூர சம்பவத்திற்கு குகி-சோ கவுன்சில் தனது பலத்த கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
Manipur violence
Published on
Summary

மணிப்பூரின் தமெங்லாங் மற்றும் நோனி மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்குள் அண்மையில் புகுந்த ஆயுதமேந்திய நாகா பயங்கரவாத குழுக்கள் அதிரடித் தாக்குதல் நடத்தின.

மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்புவதற்கான அறிகுறிகள் தென்படாத நிலையில், பல்வேறு மாவட்டங்களில் ஆயுதமேந்திய குழுக்கள் மீண்டும் தங்களது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தத் தொடர் வன்முறை சம்பவங்கள் அப்பகுதியில் வாழும் மக்களிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற சூழலையும் உருவாக்கியுள்ளன.

கிராமங்கள் மீது துப்பாக்கி சூடு

மணிப்பூரின் தமெங்லாங் மற்றும் நோனி மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்குள் அண்மையில் புகுந்த ஆயுதமேந்திய நாகா பயங்கரவாத குழுக்கள் அதிரடித் தாக்குதல் நடத்தின. இந்தத் திடீர் துப்பாக்கி சூட்டில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இத்தாக்குதலில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான்.

குகி-சோ கவுன்சில் கடும் கண்டனம்

இந்த கொடூர சம்பவத்திற்கு குகி-சோ கவுன்சில் தனது பலத்த கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அம்மாநிலத்தில் இயங்கி வரும் நாகா ஆயுதக் குழுக்களின் எல்லைமீறிய செயல்பாடுகளே வன்முறை மீண்டும் தலைதூக்குவதற்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 22 குகி பழங்குடியின மக்கள் இந்த ஆயுத குழுக்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசுக்கு கோரிக்கை

ஆயுதமேந்திய குழுக்களின் இத்தகைய தடையற்ற செயல்பாடுகள் மணிப்பூரை மீண்டும் ஒரு பெரிய அளவிலான முழுமையான இனமோதலை நோக்கி தள்ளும் ஆபத்தை கொண்டுள்ளது. எனவே, மத்திய அரசும் பாதுகாப்புப் படைகளும் உடனடியாக தலையிட்டு, பயங்கரவாத குழுக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com