தடுப்பூசி செலுத்தும் இலக்கை தவறவிட்டதா இந்தியா?- மத்திய அரசு விளக்கம்

இந்தியாவில் மூன்று மாநிலங்கள் 100 சதவீதம் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளன.
கோப்பு புகைப்படம்
கோப்பு புகைப்படம்
Published on

புதுடெல்லி:

இந்திய அரசு குறைந்த அளவே தடுப்பூசி செலுத்தியுள்ளதாக சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது. இந்நிலையில், இந்த தகவல் உண்மை இல்லை என மத்திய அரசு மறுத்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் மாபெரும் தடுப்பூசி திட்டங்கள், வளர்ச்சி அடைந்த உலக நாடுகளை விட சிறந்த அளவில் மக்களை சென்றடைந்துள்ளன. 2021-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தொடங்கிய கொரோனா தடுப்பூசி இயக்கத்தில் இதுவரை 90 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 65 சதவீத மக்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டுள்ளனர்.

இந்தியா, உலக நாடுகளே வியக்கும் வகையில் ஒன்பது மாதத்திற்கும் குறைவான நாட்களில் 100 கோடி தடுப்பூசி செலுத்தும் இலக்கினை அடைந்தது. ஒரே நாளில் 2.51 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்திய சாதனையையும் இந்தியா படைத்துள்ளது.

இந்தியாவில் 93.7 கோடி மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். அமெரிக்காவில் 73.2 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். பிரிட்டனில் 75.9 சதவீதம் பேரும், பிரான்சில் 78.3 சதவீதம் பேரும், ஸ்பெயினில் 84.7 சதவீத மக்களுக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 90 சதவீத மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவது தவணையை பொருத்தவரை அமெரிக்காவில் 61.5 சதவீத மக்களும், பிரிட்டனில் 69.5 சதவீத மக்களும், பிரான்சில் 73.2 சதவீத மக்களும், ஸ்பெயினில் 81 சதவீத மக்களும் செலுத்தியுள்ளனர். இந்தியாவில் 65 சதவீத மக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் 11 மாநிலங்கள் 100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளன. 3 மாநிலங்கள் 100 சதவீதம் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளன. பிற மாநிலங்களும் விரைவில் 100 சதவீத இலக்கை அடையும்.

இவ்வாறு சுகாதாராத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com