

இந்திய இளைஞர்களே தொடர்ந்து போராடுங்கள், நாங்கள் துணை நிற்கிறோம் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், மற்ற இரு ஆணையர்களின் ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாமல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் தன்னிச்சையாக செயல்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் எனக்கோரி பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தனர். இதனை முன்னிட்டு வன்முறை எதுவும் பரவாமல் தடுப்பதற்காக டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போராட்டம் தொடங்கும் முன் அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் போலீசாரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித் திப்கே, மாணவர் சங்க தலைவர் நேஹா போரா, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மணீஷ் சிசோடியா, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலரும் போலீசாரால் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்திய இளைஞர்களுக்கு துணை நிற்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
நான் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் நரேந்திர மோடியை எதிர்த்துப் போராடி வருகிறேன். அவர்களைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். அவர்களின் அடிப்படை குணம் கோழைத்தனம்.
இந்தக் கதையின் வில்லன்களான நரேந்திர மோடி, அமித்ஷா, மோகன் பகவத், ஞானேஷ்குமார் மற்றும் அஜித் தோவல் ஆகியோர் தங்களைச் சுற்றியுள்ள பாதுகாப்பு அரண் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி வருவதை உணர்கிறார்கள்.
பிரதமர் மோடி அவர்களே, நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். காவல்துறையினரை வரவழையுங்கள். 10 ஆயிரம், 20 ஆயிரம், 50 ஆயிரம் என நீங்கள் விரும்பும் எண்ணிக்கையில் போலீசாரை வரவழைத்து அனைத்து தலைவர்களையும் கைது செய்யுங்கள். அனைத்து இளைஞர்களையும் கைது செய்யுங்கள். எங்கள் அனைவரையும் கைது செய்யுங்கள்.
நாங்கள் உங்களைச் சூழ்ந்துவிட்டோம். இனி நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. நான் சொல்வதை குறித்துக் கொள்ளுங்கள்: எங்களுக்குத் தேவையான தகவல்கள் அனைத்தும் ஏற்கனவே எங்களுக்கு கிடைத்துவிட்டன.
நாங்கள் நமது அரசியலமைப்பை பாதுகாக்கப் போகிறோம். இந்திய மக்களின் குரலை பாதுகாக்கப் போகிறோம். கடந்த 10-15 ஆண்டுகளில் இந்தியாவிற்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், இனி ஒருபோதும் மீண்டும் நிகழாமல் நாங்கள் பார்த்துக்கொள்வோம்.
இந்திய இளைஞர்களே, உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். தொடர்ந்து போராடுங்கள். நாங்கள் உங்களுக்குத் துணை நிற்கிறோம். இந்த ஆட்சியும், நமது அரசியலமைப்பைத் தாக்கியவர்களும் தோற்கடிக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம் என தெரிவித்துள்ளார்.