

பஞ்பாப் மாநிலத்தில் ஜலந்தர்- பக்வாரா நெடுஞ்சாலையில் Lovely Professional University (LPU) என்ற தனியாருக்கு சொந்தமான பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை மாணவி ஒருவர் பல்கலைக்கழகத்திற்குள், கட்டுமான வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதன்பின் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வெளியானது.
இந்த செய்தி மாணவர்களிடையே தீயாக பரவியது. இதனால் பல்லைக்கழக வளாகத்தில் மாணவர்கள் திரண்டர். அவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். மேலும், பூந்தொட்டிகளை உடைத்தெறிந்தனர். அதோடு வளாகத்தை தீவைத்து கொளுத்தினர்.
முதலில் மாணவர்கள் நீதி வேண்டும் என கோசம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. அதோடு மட்டுமல்லாமல் ஜலந்தர்- பக்வாரா தேசிய நெடுஞ்சாலைக்கு வந்த மாணவர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது தொடர்பாக ஒரு வீடியோ வெளியானது. அதில் போராட்டம் முதலில் அமைதியாக நடைபெற்றுள்ளது. போராட்டம் நடைபெற்ற போதிலும், பல்கலைக்கழக வாயில்கள் திறந்தே இருந்துள்ளது. இதனைப் பயன்படுத்தி மற்ற நபர்கள் உள்ளே நுழைந்து அசாதாரண நிலையை உருவாக்கியுள்ளனர். அவர்கள் பல்கலைக்கழக வளாகத்தை அடித்து நொறுக்கியுள்ளனர். அதிகாரிகள் இந்த செய்து முற்றிலும் வதந்தி எனத் தெரிவித்த போதிலும், அடித்து நொறுக்கியுள்ளனர்.
போலீஸ் அதிகாரி, கற்பழிப்பு நடைபெற்றதாக எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை எனத் தெரிவித்துள்ளனர். மேலும், மாணவர்கள் ஜலந்தர் நெடுஞ்சாலையை மறித்த தகவல் நேற்று இரவு எங்களுக்குக் கிடைத்தது. நாங்கள் அங்கு சென்று நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தோம். அப்போதுதான் எல்.பி.யு. (LPU) நிர்வாகத்திடம் மாணவர்கள் சில பிரச்சினைகளை எழுப்பியிருப்பதும், பாலியல் வன்கொடுமைச் சம்பவம் ஒன்று நடந்ததாக வதந்திகள் பரவியிருப்பதும் எங்களுக்குத் தெரியவந்தது. ஆனால், அத்தகைய குற்றம் தொடர்பான எந்தப் புகாரும் எங்களுக்கு அளிக்கப்படவில்லை" என்றார்.
லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், மாணவர்கள் வதந்திகளை புறக்கணிக்குமாறு அறிவுறுத்தியதுடன், அவர்கள் வளாகத்தில் பாதுப்பாகவும் பத்திரமாகவும் இருப்பார்கள் என்றும் உறுதியளித்துள்ளது.
"சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகள் பொய்யானவை, தவறாக வழிநடத்துபவை மற்றும் விஷமத்தனமான தரப்பினரால் பரப்பப்படுபவை. நீங்கள் எந்தவொரு கலவரத்திலும் பங்கேற்க வேண்டாம் என்றும், உங்கள் விடுதி/அறை/குடியிருப்புக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், ஆத்திரமூட்டும் அல்லது சீர்குலைக்கும் எந்தவொரு நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறீர்கள். அமைதியான மற்றும் ஒழுங்கான வளாகச் சூழலைப் பராமரிக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்," என்று அந்த அறிக்கை கூறியது.