குடிநீரை வீணாக்கினால் ரூ.10,000 வரை அபராதம்: புனே மாநகராட்சி அதிரடி உத்தரவு!

தண்ணீர் கொண்டு செல்லும் டேங்கர் லாரிகளில் கசிவு இருப்பது கண்டறியப்பட்டால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.
குடிநீரை வீணாக்கினால் ரூ.10,000 வரை அபராதம்: புனே மாநகராட்சி அதிரடி உத்தரவு!
Published on: 
Summary

புனே நகரில் நிலவி வரும் வறட்சி மற்றும் அணைகளில் குறைந்து வரும் தண்ணீர் இருப்பைக் கருத்தில் கொண்டு, குடிநீர் வீணாக்கப்படுவதைத் தடுக்க புனே மாநகராட்சி கடுமையான கட்டுப்பாடுகளையும் அபராதங்களையும் விதித்துள்ளது.

வாகனங்களைக் கழுவுதல், நீச்சல் குளங்களை நிரப்புதல், தனியார் தோட்டங்களுக்குப் பாய்ச்சுதல் மற்றும் கட்டுமானப் பணிகளுக்குப் பொதுக் குடிநீரைப் பயன்படுத்தினால் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.

குற்றவியல் நடவடிக்கை பாயும்

இதுகுறித்து மாநகராட்சி நிலைக்குழு தலைவர் ஸ்ரீநாத் பீமாலே கூறுகையில், "முதல் இரண்டு முறை விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அதையும் மீறி மூன்றாவது முறையும் விதியை மீறினால், அவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை பாயும்" என்று தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி கூடுதல் ஆணையர் பவ்னீத் கவுர் இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளார்.

விதிமீறல்களும் அபராத விவரங்களும்

தண்ணீர் வெட்டு அமலில் உள்ள காலங்களில் வாகன வாஷிங் சென்டர்கள் மூடப்பட வேண்டும். விதிகளை மீறினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். சொந்த போர்வெல் அல்லது கிணறு வைத்திருப்பவர்கள் ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டுமே இயங்க அனுமதிக்கப்படுவர்.

கட்டுமானப் பணிகள், சாலைப் பணிகள் அல்லது ரெடி-மிக்ஸ் கான்கிரீட் ஆலைகளுக்கு மாநகராட்சி குடிநீரைப் பயன்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் சுத்திகரிக்கப்பட்ட நீர் அல்லது போர்வெல் நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். விதியை மீறினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படுவதோடு, கட்டுமானப் பணியும் உடனடியாக நிறுத்தி வைக்கப்படும்.

பொது மற்றும் தனியார் நீச்சல் குளங்களை நிரப்பவும், பெரிய தனியார் தோட்டங்களைப் பராமரிக்கவும் குடிநீரைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் கொண்டு செல்லும் டேங்கர் லாரிகளில் கசிவு இருப்பது கண்டறியப்பட்டால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.

அனுமதியின்றி எடுக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டு, உடனடியாக இணைப்பு துண்டிக்கப்படும்.

வீடுகள் அல்லது குடியிருப்புகளில் தண்ணீர் தொட்டிகள் நிரம்பி வழிந்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

கண்காணிப்பு மற்றும் அமலாக்கம்

இந்த உத்தரவை தீவிரமாகச் செயல்படுத்த நீர் விநியோகம், தோட்டம், கட்டிட அனுமதி, சாலைத் துறை ஆகிய துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறையும் ஒரு நோடல் அதிகாரியை நியமித்து, மாதந்தோறும் 15-ஆம் தேதிக்குள் நடவடிக்கை குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த விதியை அமல்படுத்துவதில் அலட்சியமாக இருக்கும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீநாத் பீமாலே எச்சரித்துள்ளார்.

மேலும், பொதுக் குடிநீர் விநியோகக் குழாய்களில் ஏற்படும் கசிவுகளை உடனடியாக சரிசெய்யவும், குடியிருப்பு சங்கங்கள் தங்களின் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X