கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பிரியங்கா காந்தி மகனின் 74 புகைப்படங்கள் நீக்கம் - காங்கிரஸ் கண்டனம்!

'இந்தியாவில் ஜனநாயகம் இல்லை' என்று பிஹானேர் ஹவுஸ் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Raihan Vadra
Published on: 
Summary

புதுடெல்லியில் உள்ள புகழ்பெற்ற பிஹானேர் ஹவுஸ் கலைக்கூடத்தில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா மற்றும் ராபர்ட் வதேராவின் மகனான ராய்ஹான் வதேராவின் தனிநபர் புகைப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

‘நோ ஐடியா இஸ் ஃபைனல்’ என்ற தலைப்பிலான இந்த கண்காட்சியின் தொடக்க விழா அன்று, டெல்லியில் அண்மையில் நடந்த இளைஞர் மற்றும் மாணவர் போராட்டங்கள் தொடர்பான 70-க்கும் மேற்பட்ட புகைப்படங்களை நிர்வாகம் வலுக்கட்டாயமாக அகற்ற வைத்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

"5 மணிக்குள் அகற்றாவிட்டால் தடை" – ராய்ஹான் வதேரா புகார்

இதுகுறித்து 26 வயதான ராய்ஹான் வதேரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரிவான குற்றச்சாட்டுகளைப் பகிர்ந்துள்ளார்.

நேற்று மாலை 3:30 மணியளவில் பிஹானேர் ஹவுஸ் நிர்வாகம் தன்னைத் தொடர்பு கொண்டு, மாலை 5 மணிக்குள் போராட்டப் புகைப்படங்கள் அனைத்தையும் அகற்ற வேண்டும்; இல்லையெனில் கண்காட்சி முற்றிலும் ரத்து செய்யப்படும் என மிரட்டியதாகத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் சூழலில் இத்தகைய 'போராட்ட'ப் புகைப்படங்களைக் காட்சிப்படுத்துவது சரியான நேரமல்ல என்றும், அதன் உள்ளடக்கம் "ஆட்சேபனைக்குரியது" என்றும் நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கண்காட்சியில் இருந்த 105 படைப்புகளில் சுமார் 74 புகைப்படங்கள் அகற்றப்பட்டன. இதனால் கலைக்கூடத்தின் முதல் தளத்தில் உள்ள இரண்டு பெரிய அறைகளின் சுவர்கள் வெறும் ஆணிகளுடன் வெறிச்சோடிக் காணப்பட்டன.

அந்த வெற்றுச் சுவர்களில் இந்திய அரசியலமைப்பின் முகப்புரை பிரதிகளை ராய்ஹான் வதேராவின் குழுவினர் ஒட்டினர்.

தேசியக் கொடி சர்ச்சை: "அகற்ற முடியாது" என மறுப்பு

போராட்டப் புகைப்படங்கள் மட்டுமின்றி, இந்திய தேசியக் கொடி இடம்பெற்றிருந்த இரண்டு புகைப்படங்களையும் அகற்றுமாறு நிர்வாகம் வற்புறுத்தியுள்ளது. ஆனால், "நான் இந்திய தேசியக் கொடியின் படத்தை ஒருபோதும் அகற்ற மாட்டேன்" என்று கூறி ராய்ஹான் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இது குறித்து ராய்ஹான் வதேரா அளித்த பேட்டியில்,
"கடந்த 6 மாதங்களாக நம் நாட்டில் என்னைச் சுற்றி நடந்த முக்கிய நிகழ்வுகளையும், மக்கள் ஒன்றிணையும் போது ஏற்படும் அந்த உணர்வையும் எனது கேமராவில் பதிவு செய்ய நினைத்தேன்.

கலைகளைத் தணிக்கை செய்ய நினைப்பது தவறானது. இங்கு அனைத்து கலைகளும் ஏதோ ஒரு வகையில் அரசியல் சார்ந்தவைதான். மீதமுள்ள படங்களுடன் கண்காட்சி தொடரும், அகற்றப்பட்ட படங்களை வேறு இடத்தில் முழுமையாகக் காட்சிப்படுத்துவேன்" என்று கூறியுள்ளார்.

"இது இனி ஜனநாயகம் இல்லை" – பிரியங்கா காந்தி ஆக்ரோஷம்

இந்த தணிக்கை நடவடிக்கைக்கு ராய்ஹானின் தாயாரும் காங்கிரஸ் முக்கியத் தலைவருமான பிரியங்கா காந்தி வதேரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பிரியங்கா காந்தி கூறுகையில், "இந்த நடவடிக்கை மிகவும் வேடிக்கையானது மற்றும் துரதிர்ஷ்டவசமானது.

அந்தப் புகைப்படங்களில் யாருக்கும் எதிராக எந்த ஒரு அவதூறான உள்ளடக்கமும் இல்லை. அவை வெறும் நிகழ்வுகளின் காட்சிப் பதிவுகள் மட்டுமே. நாட்டில் இளைஞர்களின் குரல் திட்டமிட்டு நசுக்கப்பட்டு வருகிறது.

இது இனி ஒரு ஜனநாயக நாடாகத் தெரியவில்லை. இன்று என் மகனுக்கு நடப்பது, நாளை நாட்டின் மற்றொரு கலைஞருக்கும் நடக்கலாம்,"என்று எச்சரித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர்கள் கூட்டாகக் கண்டனம்

காங்கிரஸின் ஊடகப் பிரிவுத் தலைவர் பவன் கேரா மற்றும் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் இந்தச் சம்பவத்திற்கு மத்திய அரசைச் சாடியுள்ளனர்.

வெறும் போராட்டப் புகைப்படங்களைக் கண்டு மற்றும் தேசியக் கொடியின் படத்தைக் கண்டு ஒரு அரசாங்கம் இந்த அளவுக்கு அச்சப்படுவது அதன் சர்வாதிகாரப் போக்கைக் காட்டுகிறது என்று அவர்கள் விமர்சித்துள்ளனர்.

மௌனம் காக்கும் நிர்வாகம்

பிஹானேர் ஹவுஸ் கலைக்கூடம் ராஜஸ்தான் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இந்த சர்ச்சை குறித்து பிஹானேர் ஹவுஸ் அதிகாரிகளை ஊடகங்கள் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோது, தங்களுக்கு இது குறித்து வெளியில் கருத்து தெரிவிக்க "அதிகாரம் இல்லை" எனக் கூறி அவர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com