என்னை கொன்று விடுவார்கள் என்று கதறிய கர்ப்பிணி - பிரசவத்திற்கு பின்பு தாயும், குழந்தையும் உயிரிழந்த சோகம்

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி மற்றும் பச்சிளம் குழந்தை இருவரும் உயிரிழப்பு.
Pregnant Woman and Newborn Die
Published on

மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 25 வயதான கர்ப்பிணி ஒருவர், தனக்கு மருத்துவமனை ஊழியர்கள் சரியாக மருத்துவம் பார்க்காமல் கொன்றுவிடுவார்கள்;

அதனால் தன்னை மருத்துவமனையில் இருந்து அழைத்து செல்லுமாறு கூறியதை அடுத்து, குழந்தையை பெற்ற சிறிது நேரத்திலேயே அந்த பெண்மணியும் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அரசு மருத்துவமனை

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ரேவா மாவட்டம் ஹட்வா பகுதியை சேர்ந்த கல்பனா என்ற 25 வயது கர்ப்பிணி ஒருவர், தனது முதல் குழந்தையை பிரசவிப்பதற்காக, அந்த பகுதியில் உள்ள ஒரு சஞ்சய் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவர், “நான் பிழைக்க மாட்டேன், தயவுசெய்து என்னை காப்பாற்றுங்கள், என் உயிருக்கு ஆபத்து” என்று கூறிய வீடியோ ஒன்று வெளியானது.

மேலும் அவர், “என்னை இப்படி நடத்துவது தொடர்ந்தால், மருத்துவமனை ஊழியர்கள் என்னை கொன்றுவிடுவார்கள்” என்று கூறுவதும் அந்த வீடியோவில் பதிவானது.

இதையடுத்து சில மணி நேரங்கள் கழித்து பிரசவித்த பச்சிளம் குழந்தையும், அந்த பெண்ணும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

கர்ப்பிணியின் காணொளி

இந்த நிலையில் கல்பனா இறப்பதற்கு முன்பு பதிவு செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. அந்த வீடியோவில், அவர் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதும், பிரசவ வார்டுக்குள் அழுதுகொண்டு, அங்கிருந்து வெளியேற முயற்சிப்பதும் பதிவாகியுள்ளது.

மேலும் அந்த பெண்மணி தனது உறவினர்களை தொடர்பு கொள்ள முயல்வதும், அவரை செவிலியர்கள் கட்டுப்படுத்தி, அங்கேயே இருக்குமாறு சமாதானப்படுத்த முயற்சிப்பதும் பதிவானது.

ஒரு கட்டத்தில், ஒரு ஊழியர் அந்த பெண்ணிடம், “உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா?" என்று கேட்கும்போது, கர்ப்பிணி தொடர்ந்து தனது குடும்பத்தினரை நோக்கிச் சென்று, தனக்கு முறையான சிகிச்சை கிடைக்கவில்லை என்று அழுதுகொண்டே குற்றம் சாட்டுவது பதிவானது.

தந்தை கோரிக்கை

கர்ப்பிணி கல்பனா உயிரிழந்தது குறித்து அவருடைய தந்தை ராம்ஷரன் மிஸ்ரா கூறுகையில், “கல்பனா எனது ஒரே மகள்; அவளது திருமணத்திற்காக 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை விற்றிருந்தேன்.

இன்று அவள் எங்களை விட்டுப் பிரிந்துவிட்டாள். இந்த அலட்சியத்திற்குப் பொறுப்பானவர்கள் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய வேண்டும்.

பணியில் இருந்த மருத்துவரையும் ஊழியர்களையும் இடைநீக்கம் செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், பிரேதப் பரிசோதனை நடத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,” என்று அவர் கூறினார்.

மேலும் கல்பனாவின் குடும்பத்தினர் கூறுகையில், மயக்க மருந்து கொடுக்கப்பட்ட பிறகு கல்பனாவுக்கு சுயநினைவு திரும்பவில்லை. அதிகப்படியான மருந்தளவு அவரது மரணத்திற்கு காரணமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.

மருத்துவமனை நிர்வாகம்

இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், மருத்துவ நெறிமுறைகளின்படி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், மருத்துவர்கள் தரப்பில் எந்தவிதமான அலட்சியமும் இல்லை என்றும் தெரிவித்தது.

இதையடுத்து கர்ப்பிணி மற்றும் அவரது குழந்தை உயிரிழந்தது தொடர்பாக விசாரிக்க, ஒரு உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்படும் என்றும், இதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்வாகம் உறுதியளித்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com