

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையிலும், அவர்களுடன் தீபாவளியை கொண்டாடும் வழக்கத்தைத் தொடரும் வகையிலும் பிரதமர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டுக்கான தீபாவளிப் பண்டிகையை நாட்டின் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் பகுதியில் கொண்டாடுகிறார். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையிலும், அவர்களுடன் தீபாவளியை கொண்டாடும் வழக்கத்தைத் தொடரும் வகையிலும் பிரதமர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
ஒரு காலத்தில் நக்சலைட்டுகளின் கோட்டையாகவும் வன்முறைகள் நிறைந்த பகுதியாகவும் அறியப்பட்ட பஸ்தர், தற்போது முழுமையான அமைதியை நோக்கி நகர்ந்துள்ளது. இப்பகுதியில் கடந்த காலங்களில் நக்சல் ஆதிக்கம் கோலோச்சியிருந்த நிலையில், தற்போது அரசின் தீவிர நடவடிக்கைகளால் அந்த அச்சுறுத்தல்கள் முற்றிலுமாகக் குறைக்கப்பட்டு வளர்ச்சிப் பணிகள் சிறப்பான முறையில் நடந்து வருவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பாதுகாப்பிற்காகப் போராடிய பாதுகாப்புப் படையினரின் அர்ப்பணிப்பு காரணமாகவே இந்த மாற்றம் சாத்தியமாகியுள்ளது.
நாட்டின் பாதுகாப்புக்காகத் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்த முப்படை வீரர்களை நேரில் சந்தித்து வணக்கம் செலுத்தவே பஸ்தருக்குச் செல்வதாக பிரதமர் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்தார். தேசத்தின் மீதான பற்றோடும், எத்தகைய கடின சூழலிலும் உறுதியோடும் சேவை செய்யும் மத்திய ஆயுதப்படை மற்றும் சத்தீஸ்கர் மாநில காவல் துறை வீரர்களின் தியாகங்களை ஒட்டுமொத்த நாடும் போற்றுவதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
பண்டிகைக் காலங்களில் தனது வீட்டை விட்டு விலகி நாட்டுக்காகக் எல்லைகளிலும் பாதுகாப்புப் பணிகளிலும் ஈடுபடும் வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவதை பிரதமர் கடந்த பல ஆண்டுகளாக ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த ஆண்டும் அந்தப் பாரம்பரியத்தை மாற்றாமல் பஸ்தர் பகுதிக்குச் சென்றுள்ளார். முன்னதாக நாட்டு மக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்த பிரதமர், மக்களுடன் இணைந்து தானும் மிகுந்த உற்சாகத்துடன் இந்தப் பண்டிகையைக் கொண்டாடுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.