புதுச்சேரியில் Road show நடத்திய பிரதமர் மோடி

ரோடு ஷோவையொட்டி அஜந்தா சிக்னல் முதல் நேரு வீதி வரை அண்ணா சாலை விழாகோலம் பூண்டது.
புதுச்சேரியில் Road show நடத்திய பிரதமர் மோடி
Published on

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக ஆட்சி நடந்து வருகிறது. மீண்டும் புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை கொண்டு வர பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக புதுவை அரசு சார்பில் லாஸ்பேட்டை மைதானத்தில் மார்ச் 1-ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ரூ.1,572 கோடி மதிப்பில் 74 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.1,142 கோடி மதிப்பில் 19 திட்ட பணிகளை தொடங்கியும் வைத்தார்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் எனது ஓட்டுச்சாவடி, வலிமையான ஓட்டுச்சாவடி என்ற தலைப்பின் கீழ் கடந்த 30-ம் தேதி தொண்டர்களோடு பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது புதுவையில் இரட்டை என்ஜின் ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து ஓட்டுகளைப் பெறவேண்டும், ஆட்சியின் பயனாளிகளிடம் கருத்து கேட்டு, சிறிய வீடியோக்களை வெளியிட வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்நிலையில், பாஜக சார்பில் நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று புதுவை வந்தார். சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுவை வந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் ரங்கசாமி, பாஜக தலைவர் ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் வேட்பாளர்கள் வரவேற்றனர்.

தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் அஜந்தா சந்திப்புக்கு வந்த பிரதமர் மோடி மாலை 4.15 மணிக்கு ரோடு ஷோ தொடங்கினார். இதில் முதலமைச்சர் ரங்கசாமி உள்பட பலர் பங்கேற்றனர். அண்ணா சாலை வழியாக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் மக்களை அவர் சந்தித்து வாக்குகளை சேகரித்தார். நேரு வீதி சந்திப்பில் ரோடு ஷோ நிறைவடைகிறது.

சுமார் 1.5 கிமீ நடக்கும் ரோடு ஷோவையொட்டி அஜந்தா சிக்னல் முதல் நேரு வீதி வரை அண்ணா சாலை விழாகோலம் பூண்டது. மாடிகளில் இருந்து மலர் தூவி வரவேற்கவும், ஆங்காங்கே சிலம்பாட்டம், ஒயிலாட்டம் என பாரம்பரிய கலைகளுடன் வரவேற்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த ரோடு ஷோவில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி திறந்த வேனில் நின்றபடி பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com