பி.எம்.கேர்ஸ் வசூலித்த ரூ.1,162.92 கோடியில் ரூ.16.47 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது: தணிக்கை அறிக்கை

இந்தியாவில் பி.எம்.கேர்ஸ் (PMcares) என்ற அவசரகால நிவாரண ஆணையம் 27 மார்ச் 2020 அன்று அமைக்கப்பட்டது.
PM cares audit report
பி.எம்.கேர்ஸ் தணிக்கை அறிக்கை
Published on

பி.எம். கேர்ஸ் நிதியானது கடந்த 2023-24 மற்றும் 2024-25 ஆகிய நிதியாண்டுகளில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ரூ.1,162.92 கோடி நன்கொடையாக வசூல் செய்யப்பட்டது. ஆனால் இந்த காலகட்டத்தில் ரூ.16.47 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக தணிக்கை அறிக்கைகள் (audit report) தெரிவித்துள்ளன.

பி.எம்.கேர்ஸ் நிவாரண முகமை

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக பி.எம்.கேர்ஸ் (PMcares) என்ற அவசரகால நிவாரண ஆணையம் 27 மார்ச் 2020 அன்று அமைக்கப்பட்டது.

2022-23 ஆம் ஆண்டில், இந்த முகமையானது நன்கொடைகளாக ரூ. 912.21 கோடியை வசூலித்த நிலையில், ரூ. 439.38 கோடியை செலவிட்டது. இதில், பெருந்தொற்றின் போது பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக ரூ. 346 கோடியும், கிட்டத்தட்ட 1 லட்சம் ஆக்சிஜன் செறிவூட்டிகளைக் கொள்முதல் செய்வதற்காக ரூ. 91.87 கோடியும் செலவிட்டது.

பெருந்தொற்றுக்குப் பிறகு, இந்த நிதிக்கு வரும் நன்கொடைகள் குறைந்துள்ளன. 2020-21 ஆம் ஆண்டில், இந்த நிதியிலிருந்து அதிகபட்சமாக ரூ. 7,678.68 கோடி வசூலானது. மேலும் இந்த நிதியில் இருந்து ரூ. 3,976.17 கோடி செலவிடப்பட்டது.

2021-22 ஆம் ஆண்டில், செலவினம் ரூ.3,716.29 கோடியாகவும், நன்கொடைகள் ரூ. 1,936.88 கோடியாகவும் இருந்தன. 2024-25 ஆம் ஆண்டில், நன்கொடையாக ரூ. 479.97 கோடியை வசூலித்தது. அதே சமயம் கோவிட்-19 காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக வெறும் ரூ. 87.85 லட்சத்தை மட்டுமே செலவிட்டது.

2023-24 ஆம் ஆண்டில், இது ரூ. 682.94 கோடியை வசூலித்து, ரூ. 15.59 கோடியை செலவிட்டது. 31 மார்ச், 2025 அன்று முடிவடைந்த ஆண்டுக்கான வரவுகள் மற்றும் செலவுகள் கணக்கின்படி, நிதியத்தின் கணக்குகளில் ரூ. 8,452.06 கோடி உள்ளது. இதில், ரூ. 7,846.65 கோடி நிலையான வைப்புத்தொகையில் இருந்தது.

நன்கொடைகள்

மொத்தத்தில், இந்த நிதியானது மார்ச் 2020-ல் தொடங்கப்பட்டதிலிருந்து நன்கொடையாக ரூ. 14,766.95 கோடியை வசூலித்துள்ளது மற்றும் 2024-25 வரை ரூ. 8,133.29 கோடியை செலவிட்டுள்ளது. இதில் பெரும்பாலான செலவினங்கள் கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் நிகழ்ந்துள்ளன.

தணிக்கை அறிக்கை

இந்த நிலையில் பிம் கேர்ஸ் நிதியின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான தணிக்கை அறிக்கையை (audit report) சமூக ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில், “கொரோனா காலத்தில் நன்கொடையாக வசூலிக்கப்பட்ட ரூ.8,452 கோடியில் வெறும் 0.01 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரதம மந்திரி மாநில பொருளாதார காப்பக நிதி ஏன் இவ்வளவு பெரிய தொகையை பயன்படுத்தாமல் முடக்கி வைத்துள்ளது.

இந்த நிதியை வசூலித்த முகமைகள், ரூ.324 கோடியை திருப்பி அளித்துள்ளன (refund). ஆனால் இந்த பணம் எதற்காகவும், ஏன் திருப்பி அளிக்கப்பட்டது என்பது குறித்தும் எந்த தகவலும் இல்லை. எந்த முகமை பணத்தை திருப்பி அளித்தது? பழுதடைந்த உபகரணங்களுக்கான பொறுப்பில் இருந்து தப்பிக்கவா இந்த பணம் திருப்பி அளிக்கப்பட்டது.

தணிக்கை அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள குறிப்புகள் ஏன் பதிவேற்றப்படவில்லை. பேரிடர்களின் போது குடிமக்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு முகமை, வெளிநாட்டு ஆதாரங்கள் உட்பட ஆயிரக்கணக்கான கோடிகளை திரட்டியுள்ளது.

ஆனால் அது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. பி.எம்.கேர்ஸ் நிதியானது தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு தகவல்களை தெரிவிக்க மறுப்பதன் மூலம், பொதுமக்களின் பார்வையில் இருந்து தொடர்ந்து தப்பித்து வருகிறது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com