24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழப்பு - பீகாரில் சோகம்!

மோசமான வானிலை நிலவும்போது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு முதலமைச்சர் அலுவலக அறிக்கை தெரிவிக்கிறது.
lightning strike
Published on

பீகார் மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்ததாக செவ்வாய்க்கிழமை வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. இந்த உயிரிழப்புகள் கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளன.

பங்கா மாவட்டத்தில் ஐந்து பேரும், லக்கிசராய் மாவட்டத்தில் மூன்று பேரும், பாட்னா மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்ததாக முதலமைச்சர் அலுவலகம் (CMO) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதியுதவி:

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

பங்கா மாவட்டத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த ஐந்து பேரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்களும் அடங்குவர்.

பங்கா மாவட்டத்தின் பௌசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொராய் கிராமத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த குஷ்மி தேவி (45), ரிங்கு தேவி (35) மற்றும் ரேணு தேவி (38) ஆகியோர் வீட்டின் வெளியே இருந்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.

பௌசி வட்டத்தைச் சேர்ந்த சிராய் கிராமவாசியான சுரேஷ் யாதவ், தனது வயலுக்குச் செல்லும் வழியில் குளம் ஒன்றின் அருகே மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இழப்பீடு:

அதே வட்டத்தைச் சேர்ந்த காசி கைரி கிராமத்தில், வயலில் நெல் நடும் தொழிலாளர்களுக்கு காலை உணவு கொடுத்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த சுஃபியானா (50) என்பவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.

பேரிடர் மேலாண்மை விதிமுறைகளின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று பங்கா கூடுதல் மாவட்ட ஆட்சியர் (ADM) அஜித் குமார் தெரிவித்தார்.

மோசமான வானிலை நிலவும்போது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், அத்துடன் பேரிடர் மேலாண்மைத் துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் முதலமைச்சர் சம்ராட் சௌத்ரி கேட்டுக்கொண்டதாக முதலமைச்சர் அலுவலக அறிக்கை தெரிவிக்கிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com