

முன்னதாக நடைபெற்ற நீட் தேர்வில் எழுந்த பல்வேறு முறைகேடு புகார்களைத் தொடர்ந்து, ஜூன் 21 அன்று நீட் மறுதேர்வு நடத்தப்படவுள்ளது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, சமூக வலைத்தளங்களில் போலியான வினாத்தாள்கள், விடைக் குறிப்புகள் மற்றும் போலி வாக்குறுதிகளை அளித்து மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றும் மோசடி கும்பல்களை ஒடுக்க தேசிய தேர்வு முகமை(NTA) இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
இதற்காக MyGov தளத்துடன் இணைந்து பிரத்தியேகமாக"https://innovateindia.mygov.in/neet-ug-2026" என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் தளம் ஜூன் 14 முதல் ஜூன் 30, 2026 வரை செயல்பாட்டில் இருக்கும். இதில், பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு சட்டம், 2024-ன் கீழ் பின்வரும் 3 முக்கியப் பிரிவுகளில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் புகார்களை அளிக்கலாம்.
டெலிகிராம், வாட்ஸ்அப் அல்லது இதர சமூக வலைத்தளங்களில் நீட் வினாத்தாள் தங்களிடம் இருப்பதாகக் கூறும் கணக்குகள் மற்றும் இணையதளங்கள், தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற வைப்பதாகவோ அல்லது வினாத்தாள்களைத் தருவதாகவோ கூறி பணம் பறிக்க முயலும் நபர்கள்/நிறுவனங்கள். NTA அதிகாரிகள் அல்லது அரசு அதிகாரிகள் போல நடித்து மாணவர்களை ஏமாற்ற முயற்சிப்பவர்கள் மற்றும் தாங்கள் சந்தேகிக்கும் நபர்கள் மீது புகார்கள அளிக்கலாம்.
மாணவர்கள், பெற்றோர்கள், பயிற்சி மையங்கள் அல்லது பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் இந்தத் தளத்தில் புகார்களைப் பதிவு செய்ய முடியும். முதலில், https://innovateindia.mygov.in/neet-ug-2026 என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
பின்னர், சம்பவத்தின் விவரங்கள், அது எந்த சமூக வலைத்தளத்தில் காணப்பட்டது, தேதி மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். மேலும், புகாருக்கு ஆதாரமாக ஸ்கிரீன்ஷாட்டுகள், இணையதள லிங்க்குகள் அல்லது ஆவணங்களை நேரடியாக அப்லோட் செய்யலாம்.
"தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் யாருக்கும் கிடைக்க வாய்ப்பே இல்லை. சமூக வலைத்தளங்களில் பரவும் எந்தவொரு வதந்திகளையும் நம்ப வேண்டாம். அதிகாரப்பூர்வத் தகவல்களுக்கு https://www.nta.ac.in மற்றும் https://neet.nta.nic.in-ஐ மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும்." என்று NTA திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும், இந்திய அரசு தொடர்பான தவறான மற்றும் போலியான தகவல்களை வாட்ஸ்அப் வழியாக PIB Fact Check (+91 8799711259) எண்ணிற்கும் அனுப்பி மக்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.