தேர்தல் ஆணையத்திற்கு எதிரான போராட்டம் – மாணவர் சங்கத் தலைவி நேகா போரா தடுக்கப்பட்டதால் பரபரப்பு!

டெல்லியில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்துவருகிறது குறிப்பிடத்தக்கது.
Neha Bora
Published on: 
Summary

நேகா போரா என்ற மாணவர் சங்கத் தலைவியை டெல்லி போலீசார் அதிகாரப்பூர்வ எண் பலகை இல்லாத ஒரு தனியார் வாகனத்தில் ஏற்றி, அடையாளம் தெரியாத இடத்திற்கு அழைத்துச் சென்றதாக மாணவர்கள் குற்றச்சாட்டு

இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க விவகாரங்களுக்கு எதிராகத் டெல்லியில் தொடர் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இதன் ஒரு பகுதியாக, நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட போராட்டத்தின் போது, அகில இந்திய மாணவர் சங்கத்தின் தேசியத் தலைவர் நேகா போரா டெல்லி போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முறைமீறி கைது செய்யப்பட்டாரா நேகா போரா? – மாணவர்கள் குற்றச்சாட்டு

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தர் நோக்கி 'AISA' அமைப்பினர் தொடர்ந்து மூன்றாவது நாளாகப் பேரணி நடத்த முயன்றனர். அப்போது, ஆந்திரா பவன் வட்டத்தில் இருந்து புறப்பட்ட போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது, நேகா போரா என்ற பெண் தலைவரை டெல்லி போலீசார் அதிகாரப்பூர்வ எண் பலகை இல்லாத ஒரு தனியார் வாகனத்தில் ஏற்றி, அடையாளம் தெரியாத இடத்திற்கு அழைத்துச் சென்றதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், அந்த வாகனத்தில் பெண் போலீசார் யாரும் இல்லை என்றும், இது சட்ட விதிகளுக்கு எதிரானது என்றும் அவர்கள் கூறினர்.

பின்னர் அவர் நரேலா தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். ஆனால், அவரது மொபைல் போன், பேக் ஆகியவற்றை தராமல் போலீசார் திருப்பி அனுப்பியதாக சக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடித்த போராட்டக்காரர்கள் – போலீசார் மறுப்பு

மாணவர் சங்கத்தின் இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்று டெல்லி காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகளைப் போராட்டக்காரர்கள் சிலர் தாக்கியதாகவும், அவர்களைக் கடித்ததாகவும் காவல்துறை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

1000க்கும் மேற்பட்டோர் கைது - மெட்ரோ மூடல்

தேர்தல் ஆணையத்தின் குளறுபடிகளுக்கு எதிராக கடந்த சில நாட்களாக டெல்லியே போராட்டக் களமாக மாறியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தடையை மீறிய போராட்டத்தில் (AAP) தலைவர்கள், சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ் மற்றும் நேகா போரா உட்பட 1,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சனிக்கிழமையன்றும் 150க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் டெல்லி போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டனர்.

இதனால் ஜந்தர் மந்தர் மற்றும் மத்திய டெல்லி பகுதிகள் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்போடு, இரும்பு தடுப்புகள் கொண்டு கோட்டை போல மாற்றப்பட்டுள்ளன. சில மெட்ரோ ரயில் நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டன.

போராட்டத்தின் பின்னணி என்ன?

தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர், தங்களுக்குத் தெரியாமல் எடுக்கப்பட்ட 'SIR' நடைமுறைகள் மற்றும் வாக்காளர் பட்டியல் நீக்கம் தொடர்பான முடிவுகளுக்கு கடந்த 10 மாதங்களில் 14 முறை தங்களது கடுமையான எதிர்ப்புகளை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளனர் என்பது வெளிச்சத்திற்கு வந்தது.

இருப்பினும், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், "ஒரு அமைப்பிற்குள் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பது இயல்பான ஒன்றுதான். தேர்தல் ஆணையத்தின் அனைத்து உத்தரவுகளும் சட்டப்பூர்வமானவை மற்றும் தகுந்த விதிமுறைகளின்படியே எடுக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் மாணவர் அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து டெல்லியில் தங்களது போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com