U Turn அடித்த பார் கவுன்சில்.. தலைமை நீதிபதி வருகையை எதிர்த்த சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தடை நீக்கம்

மாநில பார் கவுன்சில்களுக்கு இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா உத்தரவிட்டார்.
தலைமை நீதிபதி
தலைமை நீதிபதி
Published on

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற NALSAR சட்டப் பல்கலைக்கழகத்தின் 2026 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவிற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரிய காந்த்தை விருந்தினராக அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 450க்கும் மேற்பட்ட மாணவர்கள் துணைவேந்தர் மற்றும் நிர்வாகத்திற்கு மனு அனுப்பினர்.

காரணம்

இளைஞர்களை கரப்பான்பூச்சிகள் என அழைத்து, ஜூலை 20 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் மீதான காவல்துறை தாக்குதல் குறித்த வழக்கு விசாரணையின்போது, வீடியோ ஆதாரங்களை பார்க்க நேரமில்லை என மறுத்தது ஆகியவற்றை சுட்டிக்காட்டி அவரை அழைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தடை

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் அப்பல்கலைக்கழகத்தில் 2026ல் பட்டம் பெறும் மாணவர்கள் எவரையும் மாநில பார் கவுன்சில்களில் வழக்கறிஞராகப் பதிவு செய்யக் கூடாது என மாநில பார் கவுன்சில்களுக்கு இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா உத்தரவிட்டார்.

இத்தடை உத்தரவு மாணவர்களின் தொழில்முறை எதிர்காலத்தைப் பாதிக்கும் என சமூக வலைதளங்களிலும் சட்டத் துறையிலும் கடும் எதிர்ப்பும் விமர்சனங்களும் கிளம்பின.

தடை நீக்கம்

இதையடுத்து மனன் குமார் மிஸ்ரா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்திய இந்திய பார் கவுன்சில், தனது உத்தரவை திரும்பப்பெற்றது.

பெரும்பான்மையான மாணவர்கள் அப்பாவிகள் என்பதால், "தவறு செய்யாமல் எந்தவொரு மாணவரும் பாதிக்கப்படக் கூடாது" எனக் கூறி, மாணவர்கள் தாங்கள் விரும்பும் மாநில பார் கவுன்சிலில் பதிவு செய்துகொள்ள இந்திய பார் கவுன்சில் அனுமதி அளித்தது.

மாணவர்களைத் தூண்டிவிட்டதில் சில பேராசிரியர்கள் மற்றும் வெளிநபர்களுக்குத் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கும் இந்திய பார் கவுன்சில், இது குறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

சிஜேபி

முன்னதாக மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்வினையாற்றிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே, சிஜேபியை தொடங்கியபோது சமூக வலைத்தளத்தில் தான் இட்ட முதல் பதிவை நினைவுகூர்ந்தார்.

அப்போது இளைஞர்களை கரப்பான்பூச்சிகள் என தலைமை நீதிபதி சூரியகாந்தி விமர்சித்ததற்கு ஏதிவினையாக, "சட்டத் துறையில் உள்ள கரப்பான்பூச்சிகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்தால் என்ன நடக்கும்" என பதிவிட்டிருந்தார் அவர்.

தலைமை நீதிபதியின் கருத்தை தொடர்ந்து சிஜேபி இயக்கம் தொடங்கப்பட்டு மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று நாட்டின் கல்வி அமைச்சரையே ராஜினாமா செய்ய வைக்கும் அளவு வலிமை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com