VIDEO: ஜூலை 20 தாக்குதல்.. பெல்லட் துப்பாக்கியால் கண் பார்வை இழந்த இளைஞரை அழைத்துவந்து ராகுல் பேட்டி

லத்திகளையும், பெல்லட் துப்பாக்கிகளையும் பயன்படுத்திவர்கள் நீதியின்முன் நிறுத்தப்பட வேண்டும்
ராகுல், சாஹில்
ராகுல், சாஹில்
Published on

ஜூலை 20 அன்று சிஜேபி தலமையில் இளைஞர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்றபோது டெல்லி காவல்துறை மற்றும் ரேபிட் ஆக்ஷன் போர்ஸ் உள்ளிட்ட மத்திய படையினர் கொடூராமான முறையில் தாக்குதல் நடத்தினர்.

அமைதியான முறையில் முன்னேறிச் சென்ற இளைஞர்களை தடிகளால் தாக்கியும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் கலைக்க முயன்றனர். சீருடையற்ற நபர்களும் கைகளில் லத்தியுடன் இளைஞர்கள் மற்றும் பெண்களை தாக்கிய காணொளிகளும் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

காலாவதியான கண்ணீர் புகைகுண்டுகள், ஆணிகள் பொருத்திய லத்திகள், மின்சார அதிர்ச்சி தரும் லத்திகள், பெல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை இளைஞர்கள் மீது பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவற்றில் குறிப்பாக சர்ச்சைக்குரிய பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதற்காக ஆதாரமாக சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களின் மருத்துவ அறிக்கைகளும் புகைப்படங்களும் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊடகவியலாளர் ஒருவரும் பெல்லட் துப்பாக்கியால் சுடப்படும்போது உடலில் ஏற்படும் புள்ளி புள்ளியான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற புகைடபடங்களுடன் ஊடக அறிக்கைகள் வெளியாகின.

ஆனால் பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவில்லை என டெல்லி காவல்துறையும், அரசின் அதிகாரப்பூர்வ உண்மைச் சரிபார்ப்பகமான PIB-யும் மறுத்துள்ளன.

பெல்லட் துப்பாக்கிகள்

உலோகம், ரப்பர் அல்லது ஈயத்தால் செய்ப்பட்ட சிறிய குண்டுகள் Pellets எனப்படுகின்றன. ஒருமுறை சுட்டால் பல சிறிய குண்டுகள் ஒரே நேரத்தில் பாயும்.

இது உடலில் புள்ளி புள்ளியான காயங்களை ஏற்படுத்தும்.

கூட்டத்தைக் கலைக்கவும், கலவரங்களைக் கட்டுப்படுத்தவும் இவை குறைந்த ஆபத்துள்ள ஆயுதங்களாக பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் சில நேரங்களில் இந்த குண்டுகள் கண் பார்வை மற்றும் கேட்கும் திறனை பறிக்கக்கூடியவை. பெல்லட் குண்டுகள் உடலின் முக்கிய பாகங்களில் பட்டால் கடுமையான காயங்கள் மற்றும் சில சமயங்களில் உயிரிழப்பும் கூட ஏற்படக்கூடும்.

இதன் காரணமாகவே பெல்லட் துப்பாக்கிகளின் பயன்பாட்டிற்கு மனித உரிமைகள் அமைப்புகள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ராகுல், சாஹில்
ராகுல், சாஹில்

ராகுல் காந்தி பேட்டி

இந்த சூழலில் பெல்லட் துப்பாக்கியால் காயமுற்று சிகிச்சை பெற்ற சாஹில் என்ற 19 வயது மாணவரை உடன்வைத்துக்கொண்டு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

முன்னதாக இளைஞர்கள் மீதான தாக்குதல், தேர்வு முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை நாள் முழுவதும் முடங்கிய நிலையில் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

முகத்தில் உடலிலும் முகத்தில் கண்களின் அருகேயும் பெல்லெட் குண்டு தழும்புகள் கொண்ட அம்மாணவரை அருகில் வைத்துக்கொண்டு ராகுல் காந்தி செய்தியளர்களிடம் பேசுகையில், இந்த சகோதரர் (மாணவர்) கையில் தேசியக்கொடியை ஏந்தி அமைதியான முறையில் போராடிக்கொண்டிருந்தபோது பெல்லட் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.

இதனால் அவரின் ஒருபக்க கண் பார்வை பறிபோயுள்ளது. அரசு பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்தவே இல்லை என கூறுகிறது. அப்படி சொன்னார்கள் தானே, அப்போது இங்கே பாருங்கள், இது என்ன, இவரின் கண் பாதிக்கப்பட்டுள்ளது. தனது பார்வையை இழந்துள்ளார்" என மாணவரின் முகத்தை சுட்டிக்காட்டி தெரிவித்தார்.

மேலும், "அரசாங்கம், தேசத்தின் எதிர்காலத்தின் மீது தாக்குதல் நடத்துகிறது. இவர் (மாணவர்), கடினமாக படித்து போலீஸ் பணி தேர்வு எழுதியுள்ளார். ஆனால் ஒரு நாள் அவரிடம், அதன் வினாத்தாள் கசிந்துவிட்டதாக சொல்லப்பட்டது. நாட்டின் லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் இதே நிலைமை தான். அவர்களின் பெற்றோரின் கடின உழைப்பு அனைத்தும் வீணடிக்கப்பட்டுள்ளது.

அவர்களிடம் மூன்றே மூன்று கோரிக்கைகள் தான் உள்ளன. ஒன்று, யாரால் இவையெல்லாம் நிகழ்ந்ததோ அந்த கல்வி அமைச்சர் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும். இரண்டாவது, நமது எதிர்காலத்தின் மீது லத்திகளையும், பெல்லட் துப்பாக்கிகளையும் பயன்படுத்திவர்கள் நீதியின்முன் நிறுத்தப்பட வேண்டும், மூன்றாவது, இதற்கெல்லாம் மூலகர்த்தாவான நரேந்திர மோடி, இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com