குஜராத் அருகே கொடூரம்: பிறந்த சில நொடிகளில் பச்சிளம் குழந்தையை கொன்று சாக்கடையில் வீசிய தாய்

தனக்கு வேறு ஏதோ உடல்நலக்குறைவு இருப்பதாகக் கூறி, கர்ப்பமாக இருந்ததைத் தனது பெற்றோரிடம் இருந்து கடைசி வரை மறைத்துவிட்டார்.
குஜராத் அருகே கொடூரம்: பிறந்த சில நொடிகளில் பச்சிளம் குழந்தையை கொன்று சாக்கடையில் வீசிய தாய்
Published on: 
Summary

குஜராத் மாநிலத்தில் 21 வயது இளம்பெண், தனது காதலனுடன் ரகசிய உறவின் விளைவாக பிறந்த பச்சிளம் குழந்தையை சாக்கடையில் வீசி கொன்ற கொடூர சம்பவம். குழந்தை உயிருக்கு போராடியபோதும் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குஜராத் மாநிலம் காந்தி நகர் மாவட்டம் தேகாம் தாலுகாவுக்கு உட்பட்ட அங்குதலா கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கலாஜி (32) என்பவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கலாஜியும் தனது மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தவர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் ரகசியமாக பழகி வந்துள்ளனர்.

மறைக்கப்பட்ட கர்ப்பம்

இந்த தொடர்பின் காரணமாக அந்த இளம்பெண் இதற்கு முன்பு 2 முறை கர்ப்பமடைந்தார். ஆனால் இருவரும் சேர்ந்து அந்த கர்ப்பங்களை கலைத்து விட்டனர். இந்த சூழலில் அந்த பெண் 3-வது முறையாக கர்ப்பமடைந்தார். ஆரம்பத்தில் இதைக் கவனிக்காமல் விட்டதால் கரு வளர்ந்துவிட்டது. இதையடுத்து கலாஜி கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் அவை பலனளிக்கவில்லை. மருத்துவமனைக்கு சென்றால் கர்ப்பம் குறித்த உண்மை குடும்பத்தினருக்கு தெரிந்துவிடும் என்று அந்த பெண் அஞ்சினார். இதனால் தனக்கு வேறு ஏதோ உடல்நலக்குறைவு இருப்பதாகக் கூறி, கர்ப்பமாக இருந்ததைத் தனது பெற்றோரிடம் இருந்து கடைசி வரை மறைத்துவிட்டார்.

நள்ளிரவு கொடூரம்

கடந்த நவம்பர் 14-ம் தேதி நள்ளிரவு அந்த பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனே கழிவறைக்கு செல்வதாக வீட்டில் பொய் சொல்லிவிட்டு வெளியே வந்த அவர், கிராமத்தின் ஒதுக்குப்புறமான மேய்ச்சல் நிலத்திற்கு சென்றார். அங்கு காதலன் கலாஜி முன்னிலையில் அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தவுடன் சத்தமாக அழத் தொடங்கியது. அந்த அழு குரல் சத்தத்தால் ஊர்மக்களுக்குத் தங்களது ரகசிய உறவு தெரிந்துவிடுமோ என்று அந்த பெண் பதற்றமடைந்தார். அடுத்த நொடியே ஈவு இரக்கமின்றி அந்த பச்சிளம் குழந்தையின் கழுத்தை நெரித்ததுடன் அங்கிருந்த சாக்கடை வடிகாலில் வீசி விட்டு இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

சிக்கிய ஜோடி

மறுநாள் அந்த வழியாக சென்றவர்கள் சாக்கடை வடிகாலில் பச்சிளம் குழந்தை உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு காந்தி நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. பிரேத பரிசோதனையில் குழந்தை கழுத்து நெரித்து கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த தேகாம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடியவர்களை கண்காணித்ததில் அந்த இளம்பெண்ணும், கலாஜியும் சிக்கினர். கிடுக்கிப்பிடி விசாரணையில் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X