இந்தியாவின் அபார வளர்ச்சி எதிர்கட்சிகளுக்கு பிடிக்கவில்லை: ம.பி.யில் மோடி உரை

ரூ.19,620 கோடிக்கு வளர்ச்சி திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார்எதிர்கட்சிகளிடம் வளர்ச்சி திட்டம் எதுவும் இல்லை என்றார் மோடி
இந்தியாவின் அபார வளர்ச்சி எதிர்கட்சிகளுக்கு பிடிக்கவில்லை: ம.பி.யில் மோடி உரை
Published on

மத்திய பிரதேச மாநிலத்தின் 230 இடங்களை கொண்ட சட்டசபைக்கு அடுத்த மாத இறுதிக்குள் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது அங்கு பா.ஜ.க.வின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜ.க.வை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சியமைக்க தீவிரமாக போராடி வருகிறது.

இந்நிலையில், ம.பி.யில் உள்ள குவாலியர் நகருக்கு இன்று வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரூ.19,260 கோடிக்கான வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைத்து பொது மக்களிடையே உரையாற்றினார்.

அக்கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது:

மத்திய அரசிலும் மாநில அரசிலும் ஒரே கட்சி ஆட்சியில் இருப்பதை "இரட்டை எஞ்சின்" (double engine) என எதிர் கட்சியினர் கிண்டல் செய்கின்றனர். "இரட்டை எஞ்சின்" நல்லதுதான். இதன் மூலம் மாநிலம் "இரட்டை வளர்ச்சி" காண முடிகிறது.

பா.ஜ.க.வின் ஆட்சியில் பல்வேறு துறைகளில் நாடு முன்னேறி வருவதை எதிர்கட்சிகளுக்கு காண சகிக்கவில்லை. அவர்களிடம் வளர்ச்சி திட்டமோ அல்லது நாட்டின் வளர்ச்சி குறித்த தொலைநோக்கு பார்வையோ எதுவும் கிடையாது. உலகளாவிய மன்றங்களில் இந்தியா இப்போது பாராட்டப்படுவதை அவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை. உலகம் முழுவதும் இந்தியாவை புகழும் போது, இங்குள்ள எதிர்கட்சிகளுக்கு தங்கள் நாற்காலியை தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை. அதனால், இந்தியாவிற்கு கிடைக்கும் பாராட்டை காண பிடிக்காமல் வயிற்றெரிச்சலில் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்.

எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கொலை மற்றும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.

பின் தங்கிய நிலையில் இருந்த ம.பி. மாநிலம் இன்று வளர்ச்சி பட்டியலில் 10-ஆம் இடத்தில் உள்ளது. அடுத்த 5 ஆண்டுகள் ம.பி.யின் வளர்ச்சிக்கு முக்கியமான ஆண்டுகள். ம.பி.யை நாட்டின் முதன்மையான முதல் 3 மாநிலங்களில் ஒன்றாக நாம் மாற்ற வேண்டும். உங்களின் ஒரு ஓட்டு ம.பி.யை முதல் நிலைக்கு கொண்டு செல்லும்.

இவ்வாறு மோடி தெரிவித்தார்.

ம.பி.யில் 2003 ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 3 முறை சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வென்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com