அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் நேஷனல் டோரா மியாமி ரிசார்ட்டில் ஜி20 தலைவர்கள் உச்சி மாநாடு வருகிற டிசம்பர் 14,15-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. பல்வேறு உலகத் தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமை தாங்கி நடத்துகிறார்.
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் மேற்கொள்ள இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவை ஒன்றிணைக்கும் ‘குவாட்’ தலைவர்களுக்கான உச்சிமாநாட்டின் ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த மாநாட்டின் இடையே பிரதமர் மோடி, அதிபர் டிரம்பை நேரில் சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் செர்ஜியோ கோர் உறுதிப்படுத்தி உள்ளார்.
அவர் கூறுகையில் ஜி20 மாநாட்டின் போது அதிபர் டிரம்ப் சந்திக்க திட்டமிட்டுள்ள முக்கிய உலகத் தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தகம் மற்றும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணை வாங்கும் நாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள 100 சதவிகித வரிகள் மூலமாக இந்தியாவை அச்சுறுத்தி வரும் சூழலில் பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் இருவரும் சந்திக்க இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த ஜூன் மாதம் பிரான்சில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின் போது 2 தலைவர்களும் சந்தித்துப் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கப் பயணத்தைத் தொடர்ந்து பிரதமர் மோடி கனடாவிற்குப் பயணம் மேற்கொள்ளக் கூடும் எனக் கூறப்படுகிறது.
கனடா பிரதமர் மார்க் கார்னியை சந்தித்து, இரு நாடுகளுக்கு இடையேயான விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது.
இப்பயணம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
கனடா பிரதமர் மார்க் கார்னி கூறுகையில், இந்தியாவுடனான எங்கள் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் நாங்கள் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறோம்.
இந்தியாவுடன் உறவு மிகவும் முக்கியமானது. பிரதமர் மோடி டிசம்பரில் கனடாவுக்கு வருகை தருவார். அவரை வரவேற்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்றார்.
இந்தியா, கனடா ஆகிய இரு நாடுகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய முயன்று வருகின்றன. ஏற்கனவே, வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுடன், முதலீட்டு
உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.