search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பட்டம் வாங்கிய சில மணி நேரத்தில் எம்.பி.பி.எஸ் மாணவர் பாம்பு கடித்து பலி
    X

    பட்டம் வாங்கிய சில மணி நேரத்தில் எம்.பி.பி.எஸ் மாணவர் பாம்பு கடித்து பலி

    • விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மற்றும் கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா உள்ளிட்டோர் பங்கேற்று பட்டம் வழங்கினர்.
    • பிரேதப் பரிசோதனையில் அவரது ரத்த மாதிரிகளில் அதிக அளவு விஷம் இருப்பது தெரியவந்துள்ளது.

    பெங்களூரு:

    பெங்களூருவில் இருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள துமகுருவின் புறநகரில் ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஆதித் பாலகிருஷ்ணன் (வயது 21) என்பவர் எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். கல்லூரி அருகேயே வீடு எடுத்து ஆதித் வாடகைக்கு தங்கி இருந்தார். நேற்று முன்தினம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மற்றும் கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா உள்ளிட்டோர் பங்கேற்று பட்டம் வழங்கினர்.

    விழாவில் மாணவர் ஆதித் பாலகிருஷ்ணன் பட்டம் வாங்கிக் கொண்டு இரவு 11 மணியளவில் வீடு திரும்பினார். வீட்டின் அருகில் வாகனம் நிறுத்தும் இடத்திற்கு அருகே வந்தபோது அவரை விஷ பாம்பு கடித்தது. வீட்டின் அருகே பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் இருந்து இந்த விஷ பாம்பு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    பாம்பு கடித்ததை அவர் உணரவில்லை. வீட்டிற்கு வந்ததும் அவர் கீழே சுருண்டு விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார். திருச்சூரில் இருந்து பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மாணவனின் தந்தை இத்தாலியில் உள்ளார். அவருக்கு இது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து துமகூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில், மாணவர் ஆதித் பாலகிருஷ்ணன் உடலில் பாம்புக்கடித்தற்கான அடையாளம் காணப்பட்ட நிலையில் பிரேதப் பரிசோதனையில் அவரது ரத்த மாதிரிகளில் அதிக அளவு விஷம் இருப்பது தெரியவந்துள்ளது என்றனர்.

    கல்லூரி துணை முதல்வர் டாக்டர் பிரபாகர ஜி.என் கூறுகையில், ஆதித் சிறந்த மாணவர். அவரை சரியான நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்றார்.

    Next Story
    ×