

சமூக வலைதளத்தில் பரவி வரும் அந்த வீடியோவில், டி.வி.எஸ் எக்ஸ்.எல் ரக இருசக்கர வாகனத்தின் பின்புறம் பிரத்யேகமாக இணைக்கப்பட்ட மெட்டல் கூடைக்குள் 5 சிறுவர்கள் நெரிசலான நிலையில் அமரவைக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் மைசூரு-நஞ்சன்கூடு பிரதான சாலையில், நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில் தனியாக இரும்புக் கூடு போன்ற கூடையை அமைத்து, அதற்குள் ஐந்து சிறுவர்களை அமரவைத்து ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தை செலுத்தி சென்றுள்ளார். இந்த அதிர்ச்சி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, வாகன ஓட்டிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளத்தில் பரவி வரும் அந்த வீடியோவில், டி.வி.எஸ் எக்ஸ்.எல் ரக இருசக்கர வாகனத்தின் பின்புறம் பிரத்யேகமாக இணைக்கப்பட்ட மெட்டல் கூடைக்குள் 5 சிறுவர்கள் நெரிசலான நிலையில் அமரவைக்கப்பட்டுள்ளனர். மேலும், வாகனத்தை ஓட்டிச் செல்லும் நபருக்கு முன்னால் மற்றொரு சிறுவன் அமர்ந்திருப்பதைக்காண முடிகிறது.
வாகனத்தை ஓட்டிய நபர் தலைக்கவசம் அணிந்திருந்தபோதிலும், பின்னால் மற்றும் முன்னால் பயணித்த குழந்தைகள் எவருக்கும் எவ்வித அடிப்படைப் பாதுகாப்பு உபகரணங்களும் இல்லை. வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை இரவில், ஊட்டி பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே இந்த ஆபத்தான பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, இருசக்கர வாகனங்களில் இருவர் மட்டுமே பயணிக்க அனுமதி உண்டு. ஆனால், வாகனத்தில் முறையற்ற வகையில் உலோக அமைப்புகளை இணைத்து, குழந்தைகளை ஏற்றிச் சென்றது அப்பட்டமான விதிமீறலாகும். வாகனத்தில் முறையான பாதுகாப்பு தடுப்புகள் ஏதுமின்றி, அதிவேகமாக செல்லும் பிரதான சாலையில் இதுபோன்ற அபாயகரமான பயணத்தைச் செய்வது மிகப்பெரிய விபத்துக்கு வழிவகுக்கும் என போக்குவரத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து மைசூரு போக்குவரத்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவர்களின் உயிரோடு விளையாடும் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மோட்டார் வாகனச் சட்டத்தின்கீழ் வாகனப் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் இணையவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.