தேர்தல் பிரசாரத்தில் மம்தாவுக்கு கால் முறிவு - பொய் குற்றச்சாட்டு என விசாரணைக்கு உத்தரவிட்ட முதல்வர்

மேற்கு வங்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசாரத்தில் மம்தா பானர்ஜி தனக்கு கால் முறிவு ஏற்பட்டதாக கூறினார்.
Mamata's Leg Injury
Published on: 
Summary

மேற்கு வங்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனக்கு கால் முறிவு ஏற்பட்டதாக மம்தா பானர்ஜி கூறிய நிலையில், தற்போது அந்த குற்றச்சாட்டை விசாரிக்கும்படி அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசாரத்தில் மம்தா பானர்ஜி தனக்கு கால் முறிவு ஏற்பட்டதாக கூறினார். மேலும் தேர்தல் பிரசாரத்தின் போது தனது இடது கால் மற்றும் இடுப்பில் காயங்கள் ஏற்பட்டதாக மம்தா கூறினார்.

அந்த பிரசாரத்தின் போது, அடையாளம் தெரியாத சில நபர்கள் வேண்டுமென்றே தன்னை கார் கதவின் மீது தள்ளியதாகவும், அதனால் காரின் கதவு தனது இடது காலில் பலமாக மோதி நசுக்கியதாகவும் அவர் கூறியிருந்தார்.

இதையடுத்து மருத்துவ சிகிச்சைகளுக்கு பிறகு, மார்ச் 12 அன்று தனது இடது காலில் போடப்பட்ட கட்டுடன் அடுத்தடுத்த தேர்தல் பிரசாரத்தை சக்கர நாற்காலியில் தொடர்ந்தார்.

இந்த தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, மொத்தமுள்ள 294 இடங்களில் 216 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றியை பெற்றது. மேலும் இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 77 இடங்களை மட்டுமே பெற்றிருந்தது.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனக்கு கால் முறிவு ஏற்பட்டதாக மம்தா பானர்ஜி பொய் குற்றச்சாட்டு கூறியுள்ளதாக, மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுவேந்து கூறுகையில், “2021-ல் நந்திகிராமில் பிரசாரம் செய்தபோது மம்தா பானர்ஜி தனது கால் காயத்தைப் போலியாகக் காட்டியுள்ளார்.

இது பாங்கூர் நரம்பியல் நிறுவனத்தின் கதிரியக்க துறையின், மார்ச் 11, 2021 தேதியிட்ட அறிக்கை. இதில் எலும்பு முறிவுக்கான எந்த ஆதாரமும் இல்லை.

அவரது பொய்யான குற்றச்சாட்டு நந்திகிராம் மக்களை அவமதித்துள்ளது. சிஐடி இந்த விவகாரத்தை விசாரித்து வருகிறது, மேலும் நான் கூடுதல் விவரங்களை வெளியிட மாட்டேன்.

அக்டோபர் 9-ஆம் தேதிக்குப் பிறகு தேர்தல் நடத்தை விதிகள் நீக்கப்பட்டவுடன், இந்த தவறான பிரசாரம் குறித்து நாங்கள் ஒரு புதிய விசாரணையைத் தொடங்குவோம்” என்று அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com