

காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதி ராதித்யா சிந்தியா, குலாம் நபி ஆசாத் போன்ற தலைவர்கள் வெளியேறிவிட்டனர். இதில் ஜோதிராதித்யா சிந்தியா, பாஜக-வில் இணைந்து தற்போது மத்திய அமைச்சராக உள்ளார். இந்த நிலையில், ராகுல் காந்தில் காங்கிரஸ் கட்சியின் இளம் தொண்டர்களுடன் உரையாடினார். அப்போது காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் உடன் இருந்துள்ளார்.
இந்த உரையாடலின்போது, ராகுல் காந்திக்கும், கார்கேவுக்கும் இடையிலான உரையாடல் மற்றவர்களை சற்று திகைக்க வைத்துள்ளது.
ஜோதிராதித்யா சிந்தியா, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறியதை உதாரணமாக காட்டி ராகுல் காந்தி பேசும்போது "கோழைகளும், பேராசைக்காரர்களும் வெளியேறிய நிலையில், காங்கிரஸ் கட்சியில் தற்போது சிங்கங்கள் மட்டும் எஞ்சியுள்ளன" என்று ராகுல் காந்தி கூறியதாக தெரிகிறது.
அப்போது ராகுல் காந்தியை சற்று வெறுப்பேற்றும் வகையில், நகைச்சுவையாக "கட்சியில் இருந்து வெளியேறியதாக கூறிய தலைவர்கள் அனைவரும் உங்களுடைய நண்பர்கள்" என்று கார்கே தெரிவித்ததாக ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று செய்து வெளியிட்டுள்ளது.
இதனால் அங்கு இருந்தவர்கள் சற்று வியந்து போனார்கள். உடனே ராகுல் காந்தி "இங்கு எனது சகோதரி பிரியங்கா காந்தி அமர்ந்து இருக்கிறார். அவருக்கு தெரியும் ஜோதிராதித்யா சிந்தியா என்னுடைய நண்பர் கிடையாது என்று.
அரசியல் தொடர்பு குறித்து தனது பாட்டியான முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியிடம் இருந்து கற்றுக் கொண்டேன். என்னுடைய அரசியல் கற்றல், எனது பாட்டியிடம் இருந்து வந்தது. ஒருமுறை, நான் அவரிடம், உங்களுடைய சிறந்த நண்பர் யார்? என்று கேட்டேன். உடனே அவர், தனக்கு சிறந்த நண்பர் கிடையாது என்றார்.
எங்களுடைய வீட்டிற்கு அடிக்கடி வரும் ஒரு பெண்ணின் பெயரை குறிபபிட்டு, அவர் உங்களுடைய சிறந்த நண்பர் இல்லையா? என்று கேட்டேன். அதற்கு என்னுடைய பாட்டி இல்லை, அவருக்கு நான் சிறந்த நண்பராக இருக்கலாம். எனக்கு அவர் சிறந்த நண்பர் இல்லை" என்று கூறியுள்ளார்.
அத்துடன் கார்கேவை பார்த்து, "நான் அரசியல் சார்ந்த ஒரு நபர். நண்பராக தோன்றுபவர் உண்மையில் நண்பராக இருக்காது. எதிரியாகத் தோன்றுபவர் உண்மையில் எதிரியாக இருக்காது. எனது உண்மையான நண்பர்கள் யார் என்பதைக் கண்டறிவது உங்களுக்கு மிகவும் கடினமான காரியம்" என்றார்.
இளைஞர்கள் காங்கிரஸ், மாணவர்கள் அணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் இருந்து 60 இளைஞர்களை அழைத்து அவர்களுடன் ராகுல் காந்தி உரையாடினார்.