மகாராஷ்டிரா: சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்... கடலில் மூழ்கி 8 பள்ளி மாணவர்கள் பரிதாப பலி!

அலையின் வேகத்தை கணிக்க முடியாததால், அலை வந்த வேகத்திற்கு கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா: சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்... கடலில் மூழ்கி 8 பள்ளி மாணவர்கள் பரிதாப பலி!
Published on: 

மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள திவேகர் கடற்கரையில், சுற்றுலா சென்ற புனேவைச் சேர்ந்த 8 பள்ளி மாணவர்கள், நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புனே மாவட்டம் ஆலந்தியில் உள்ள ‘வின்னர்ஸ் அகாடமி’ என்ற தனியார் பயிற்சி மையத்தைச் சேரந்த 48 பேர் கொண்ட குழு, சுற்றுலாவிற்காக திகீ சாகரி பகுதிக்கு வந்துள்ளனர். இதில் 11 மற்றும் 12ம் வகுப்பைச் சேர்ந்த 25 மாணவர்கள், 17 மாணவிகள், 6 ஆசிரியர்கள் அடங்குவர்.

சுற்றுலா வந்த மாணவர்கள் சாதாரணமாக விளையாடுவதற்காக கடலில் இறங்கியுள்ளனர். ஆனால் அலையின் வேகத்தை கணிக்க முடியாததால், அலை வந்த வேகத்திற்கு கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் இழுத்து செல்லப்பட்டு உடனேயே அங்கிருந்த மற்ற மாணவர்கள், ஆசிரியர்கள் காவல்துறை, உள்ளூர் மக்களிடம் உதவி கேட்டுள்ளனர். உடனேயே உள்ளூர் மக்கள், கடலோரக் காவல் பிரிவினர் மற்றும் மீட்பு படையினர் இணைந்து உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட 8 பேரும் உடல்களாகவே மீட்கப்பட்டனர். இறந்தவர்களின் உடலைப் பார்த்து சக மாணவர்கள் கதறி அழுதனர். இதுதொடர்பாக வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.

பலியானவர்கள் தன்மய் தத்தாத்ரே வாஹிலே, சுமித் பாரத் அஹிரே, பிரணவ் ராம்தாஸ் பன்சோடே, கைவல்யா சதீஷ் வசங்கர், ராஜ்வீர் யுவராஜ் வாஹிலே, யாஷ் கிரண் வான்கடே, சோஹம் துக்காராம் பண்ட்வால்கர் மற்றும் கௌஸ்துப் சந்தீப் தவுண்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பின்னர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்த திகீ சாகரி காவல் நிலைய போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com