மகாராஷ்டிரா அரசு மருத்துவமனை தீ விபத்தில் பச்சிளம் குழந்தைகள் 3 பேர் பலி – 6 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை!

ஒரு குழந்தையின் கை மற்றும் கால்களில் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் அதன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
Maharastra Fire Accident
Maharastra
Published on

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்தில் உள்ள மாவட்டப் பெண்கள் அரசு மருத்துவமனையின் புதிய கட்டடத்தில் இன்று அதிகாலை நேரிட்ட பயங்கர தீ விபத்தில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று பச்சிளம் குழந்தைகள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 6 குழந்தைகள் மீட்கப்பட்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாலையில் வெடித்த வென்டிலேட்டர்

அமராவதி மாவட்டப் பெண்கள் மருத்துவமனையின் புதிய கட்டடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள 'புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு' (NICU)-ல் இன்று அதிகாலை சுமார் 4:00 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

அங்கு வைக்கப்பட்டிருந்த வென்டிலேட்டர் கருவி ஒன்று திடீரென வெடித்ததே தீ விபத்துக்குக் காரணம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெடித்த சில நிமிடங்களிலேயே தீ மற்றும் அடர்ந்த புகை அந்தப் பிரிவு முழுவதும் அதிவேகமாகப் பரவியது.

3 குழந்தைகள் மூச்சுத்திணறி பலி

விபத்து நடந்த புதிய மருத்துவமனைக் கட்டடத்தில் தலா 13 படுக்கைகள் கொண்ட 3 தனித்தனி தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (மொத்தம் 39 படுக்கைகள்) செயல்பட்டு வருகின்றன.

விபத்து நேரிட்ட குறிப்பிட்ட அந்தப் பிரிவில் மொத்தம் 12 கைக்குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தன. தீப்பிடித்த உடனே அங்கு பணியில் இருந்த செவிலியர்களும் மருத்துவப் பணியாளர்களும் துணிச்சலாகச் செயல்பட்டு குழந்தைகளை வெளியேற்ற முயன்றனர்.

இருப்பினும், அடர்ந்த புகையை சுவாசித்ததால் மூன்று குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் குறைப்பிரசவத்தில் பிறந்த, மிகக் குறைந்த எடையுடைய மற்றும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பிஞ்சுகள் ஆவர்.

மாற்று மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்ட 6 குழந்தைகள்

தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்ட மற்ற குழந்தைகளில் 6 குழந்தைகள் உடனடியாகத் தீவிர சிகிச்சைக்காக அருகில் உள்ள வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர்.

சிலர் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கும், மற்றவர்கள் டாக்டர் பஞ்சாப்ராவ் தேஷ்முக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

தற்போதைய நிலவரம்

மாவட்ட முதன்மை மருத்துவர் டாக்டர் வினோத் பவார் அளித்துள்ள தகவலின்படி, மீட்கப்பட்ட குழந்தைகளில் ஒரு குழந்தையின் கை மற்றும் கால்களில் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் அதன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மற்ற மூன்று குழந்தைகளுக்கும் லேசான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன, தற்போது அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது.

7 ஆண்டுகளுக்கு முன்பும் இதே விபத்து

தற்போது விபத்து நேரிட்ட இந்த புதிய கட்டடத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டு ஒரு வருடம்தான் ஆகிறது. சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு இதே மருத்துவமனையின் பழைய கட்டடத்தில் மின் கசிவு ஏற்பட்டு இதேபோன்ற விபத்து ஏற்பட்டது.

இன்றைய விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து தீயணைப்புத் துறையினரும் போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com