மத்தியப் பிரதேசம்: பிறந்த 16 மணி நேரத்தில் பச்சிளம் குழந்தை படுகொலை? கழுத்தில் காயங்களுடன் சடலமாக மீட்பு!

குழந்தை இறந்தபோது வாயில் ரத்தம், நெரிப்பு காயங்கள் இருந்ததால் அதிர்ச்சி.
New born baby died
Published on: 
Summary

மத்தியப் பிரதேச மாநிலம் அசோக்நகர் மாவட்டத்தில், பிறந்து 16 மணி நேரமே ஆன ஒரு பச்சிளம் பெண் குழந்தை, மருத்துவமனையிலேயே கழுத்து நெரிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக அந்தக் குழந்தையின் குடும்பத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்தேரி பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11:50 மணியளவில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

பிறந்தவுடன் அந்தக் குழந்தை மருத்துவமனையின் சிறப்பு பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டது.

சந்தேகத்தை கிளப்பிய ரத்தக் கறைகள்

சனிக்கிழமை மதியம் 3 மணி முதல் 4 மணிக்குள் அந்தக் குழந்தை திடீரென உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. குழந்தையின் உடல்நிலை மோசமடைந்து இறந்திருக்கலாம் என்று முதலில் நினைத்த நிலையில், மருத்துவர்கள் சோதித்த போது அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்தன.

குழந்தையின் வாயில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது. குழந்தையின் கழுத்தைச் சுற்றி கயிறு அல்லது கைகளால் பலமாக நெரிக்கப்பட்டதற்கான தழும்புகள் மற்றும் காயங்கள் இருந்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம், இது இயற்கையான மரணம் அல்ல, திட்டமிட்ட கொலை என்ற சந்தேகத்தில் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தது.

குடும்பத்தினர் மீது போலீஸ் சந்தேகம்

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், குறிப்பிட்ட அந்த சிகிச்சை பிரிவுக்குள் வெளிநபர்கள் யாரும் எளிதில் நுழைய முடியாது என்பதும், குழந்தையை கையாளுவதற்கு குடும்பத்தினருக்கு மட்டுமே அனுமதி இருந்தது என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், அந்த வார்டில் சிசிடிவி கேமராக்கள் இல்லாதது குற்றவாளியை உடனடியாகக் கண்டறிவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

பெண் குழந்தை என்பதால் கொலையா?

கொல்லப்பட்ட பச்சிளம் குழந்தை அந்தத் தம்பதியின் இரண்டாவது பெண் குழந்தை ஆகும். இதனால், வாரிசு மோகம் அல்லது பெண் குழந்தை என்ற வெறுப்பு காரணமாகக் குடும்பத்தினரே இந்தத் துரோகத்தை செய்திருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அறிக்கை வந்த பிறகே முழுமையான விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com