எவரெஸ்ட் பேஸ் கேம்ப் பயணத்தில் சோகம்: கேரள இளம் டிராவல் விலாக்கர் நேபாளத்தில் உயிரிழப்பு!

நேபாளத்தின் கோரக்ஷெப் பகுதியில் வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார் அஞ்சுநாத்.
Travel with Anjunath
Published on: 
Summary

எவரெஸ்ட் பேஸ் முகாம் செல்லும் வழியில் உள்ள உயர் மலைப் பகுதியான கோரக்ஷெப் என்ற இடத்தில் அஞ்சுநாத் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் பேஸ் முகாமை நோக்கிய சாகச மலையேற்றப் பயணத்தின் போது கேரளத்தை சேர்ந்த இளம் டிராவல் விலாக்கர் ஒருவர் நேபாளத்தில் உயிரிழந்துள்ளார். கண்ணூர் மாவட்டம் தலைச்சேரி அருகிலுள்ள எரண்ஹோலி பகுதியைச் சேர்ந்த அஞ்சுநாத் காவிங்கல் வளப்பில் கடந்த வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் மலையேற்றப் பயண ஆர்வலர்கள் மற்றும் சமூக வலைதளப் பயனர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

எவரெஸ்ட் பேஸ் முகாம் செல்லும் வழியில் உள்ள உயர் மலைப் பகுதியான கோரக்ஷெப் என்ற இடத்தில் அஞ்சுநாத் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,164 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கோரக்ஷெப், எவரெஸ்ட் பேஸ் முகாமை நோக்கிச் செல்லும் பயணிகளின் இறுதி முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றாகும். கடுமையான தட்பவெப்ப நிலை மற்றும் மிகக் குறைந்த ஆக்சிஜன் அளவு காரணமாக இந்தப் பகுதி பயணிகளுக்குப் பெரும் சவால்களை ஏற்படுத்துகிறது.

கடும் மலை நோய் சந்தேகம்

அஞ்சுநாத்தின் உயிரிழப்புக்கு கடும் மலை நோய் எனப்படும் அக்யூட் மவுண்டன் சிக்னஸ் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதிக உயரமுள்ள பகுதிகளுக்கு வேகமாக ஏறும்போது, குறைந்த ஆக்சிஜன் அளவுக்கு உடல் தகவமைத்துக் கொள்ளத் தவறுவதால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. மீட்புக் குழுவினர் அவரது உடலை லுக்லா வழியாகக் காத்மாண்டு நகருக்குக் கொண்டு வந்ததாகப் பயண வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஞ்சுநாத் 'டிராவல் வித் அஞ்சுநாத்' என்ற பெயரில் சமூக வலைதள கணக்குகள் மூலம் தனது பயண அனுபவங்களைத் தொடர்ந்து பகிர்ந்து வந்தார். கடந்த ஆண்டு அன்னபூர்ணா அடிப்படை முகாம் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்திருந்த அவர், அதனைத் தொடர்ந்து எவரெஸ்ட் பேஸ் முகாம் பயணத்தை மேற்கொண்டார். அன்னபூர்ணா அடிப்படை முகாம் காட்சிகள் மற்றும் பிரமிக்க வைக்கும் மலைத்தொடர்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவர் பதிவிட்டு வந்த நிலையில், அவரது திடீர் மறைவு பயணக் குழுவினரிடையே ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

X