கேரளத்தில் தொடரும் பின்னடைவு- முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து விலகுவதால் பா.ஜ.க அதிர்ச்சி

தனது ராஜினாமா கடிதத்தை அவர் கட்சியின் மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகரிடம் வழங்கி உள்ளார்.
BJP Resignation
Published on: 

தென் மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக பாடுபட்டு வருகிறது. இதில் கேரளம் மாநிலத்தில் அந்தக் கட்சி வேகமாக முன்னேற்றம் கண்டு வருகிறது.

பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் வென்ற பா.ஜ.க, உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியது.

அந்த கட்சியில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும், புதியவர்களும் இணைந்தனர். கேரள முன்னாள் முதலமைச்சர் கருணாகரனின் மகள் பத்மஜா, முன்னாள் தடகள வீராங்கனை பத்மினி தாமஸ் உள்ளிட்ட பலர் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்தனர்.

மாநில முன்னாள் டி.ஜி.பி. ஸ்ரீலேகாவும் பா.ஜ.கவில் இணைந்து திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் கவுன்சிலராக வெற்றி பெற்றார்.

இந்த சூழலில் பா.ஜ.கவில் இணைந்த பலரும் சமீபகாலமாக அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. உரிய மரியாதை, பதவிகள் இல்லை என்ற காரணத்தால் அவர்கள் கட்சி பணியில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தனர்.

இதில் முன்னாள் டி.ஜி.பி. ஸ்ரீலேகா, மேயர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்தார். அவர் பதவி விலகல் கடிதத்தை கொடுத்ததாகவும் கூறப்பட்டது.

பின்னர் மேலிடம் சமரசத்தை தொடர்ந்து பா.ஜ.கவில் நீடித்து வருகிறார். இருப்பினும் அவர் கட்சி பணியில் வேகம் காட்டவில்லை என கூறப்படுகிறது.

இந்த சூழலில் முன்னாள் முதலமைச்சர் கருணாகரனின் மகள் பத்மஜா மற்றும் முன்னாள் தடகள வீராங்கணை பத்மினி தாமஸ் ஆகியோர் அடுத்தடுத்து பா.ஜ.க.வில் இருந்து விலகி உள்ளனர். அவர்களது விலகல் பா.ஜ.கவுக்கு பின்னடைவு என்பதால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தனக்கு அளித்த வாக்குறுதிகளை பா.ஜ.க. நிறைவேற்றாததால் கட்சியில் இருந்து விலகுவதாக பத்மினி தாமஸ் தெரிவித்து உள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை அவர் கட்சியின் மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகரிடம் வழங்கி உள்ளார்.

அடுத்த கட்டமாக காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைய இருப்பதாகவும், காங்கிரஸ் கட்சி, எனது குடும்பம் போன்றது என்றும் பத்மினி தாமஸ் தெரிவித்து உள்ளார். இதேபோல் பத்மஜாவும் மீண்டும் காங்கிரசுக்கு திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அவர்களை கட்சியில் இணைக்க காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக கேரள மாணவர் சங்க தலைவர் அலோஷியஸ் சேவியர் தனது முகநூல் பதிவில், காங்கிரசில் சலுகை அளிக்கப்பட்ட நாட்கள் முடிந்துவிட்டன.

பல ஆண்டுகளாக உழைத்த சாதாரண கட்சித் தொண்டர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.

பத்மஜாவும் பத்மினியும் வாக்குச்சாவடி மட்டத்தில் பணியாற்ற வேண்டும். 10 ஆண்டுகளாக பணியாற்றிய சாதாரண காங்கிரஸ் தொண்டர்கள், கட்சி முழுவதும் உள்ள பதவிகளுக்கு பரிசீலிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் மிகவும் கடினமான காலகட்டத்தில் இருந்தபோது கட்சியை கைவிட்டுச் சென்ற பத்மஜா, பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுவிட்டு கட்சிக்குத் திரும்பினாலும், அவருக்குச் சிவப்புக் கம்பள வரவேற்போ பதவியோ வழங்கக்கூடாது.

மாறாக அடிமட்ட அளவில் பொறுப்புகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அலோஷியஸ் சேவியர் கூறினார்.

X