

கேரளத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவர் கைது செய்யப்பட்டுளார்.
கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டம் வண்டூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமியின் நடத்தை, கடந்த சில நாட்களாக பெற்றோருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிறுமியிடம் பெற்றோர் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர் பொம்மைகளைக் காட்டி புதர் நிறைந்த பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக வண்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தது 70 வயதான விஜயகுமார் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.
போலீசாரின் தொடர் விசாரணையில், சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை வட்டப்பரம்பு பகுதியைச் சேர்ந்த 46 வயதான நவுபல் என்பவர் தனது செல்போனில் படம் பிடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விஜயகுமார் சிறுமியைத் தனியாக அழைத்துச் செல்வதைக் கவனித்த நவுபல், பின்தொடர்ந்து சென்று இருவருக்கும் தெரியாமல் காட்சியைப் பதிவு செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். நவுபலையும் கைது செய்த போலீசார், அவரது செல்போனில் இருந்த காட்சிகளைப் பறிமுதல் செய்து, இச்சம்பவம் குறித்து ஏன் போலீசாரிடம் தெரிவிக்கவில்லை என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.