9 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த தலைவர் மருத்துவமனையில் அனுமதி - மாணவர்கள் மீது அடக்குமுறை - ஜார்க்கண்டில் போராட்டம் தீவிரம்

காவல்துறையினர் நடத்திய தடிஅடியிலும் அவர் காயமடைந்துள்ளதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.
தேவேந்திர நாத் மஹதோ
தேவேந்திர நாத் மஹதோ
Published on

ஜார்க்கண்ட் மாநில அரசின் JPSC, JSSC தேர்வாணைய வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளை கண்டித்து நடந்து வரும் மாணவர் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில் ராஞ்சியில் விளையாட்டு மைதானத்தில் நடந்து வரும் போராட்டத்தில் JLKM என்ற அரசியல் கட்சியின் தலைவர் தேவேந்திர நாத் மஹதோ 9 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்திற்கு பின் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சட்டமன்றம் நோக்கி பேரணி

முன்னதாக நேற்று பழைய சட்டமன்றக் கட்டிடத்திலிருந்து புதிய சட்டமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்திய பேரணியில் பங்கேற்ற போது, தேவேந்திர நாத் மஹதோவின் இரத்த சர்க்கரை அளவு திடீரெனக் கடுமையாகக் குறைந்ததால் அவரது உடல்நிலை மோசமடைந்தது.

தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேரணியின் போது காவல்துறையினர் நடத்திய தடிஅடியிலும் அவர் காயமடைந்துள்ளதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன் பேசிய மஹதோ, "அரசு தடிகள் மற்றும் துப்பாக்கிகள் மூலம் ஆட்சியை நடத்த முடியாது. மாணவர்களின் குரலை ஒடுக்க நினைத்தாலும் இந்த போராட்டம் தொடரும்" எனக் கூறினார்.

தடிஅடி

பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் பாதுகாப்புத் தடுப்புகளை உடைத்துக் கொண்டு சட்டமன்றத்தின் 1-வது கேட் வரை சென்று அமர்வில் ஈடுபட்டனர்.

அவர்களை கலைக்கக் காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகள், தண்ணீர் பீரங்கிகள் மற்றும் தடிஅடியைப் பயன்படுத்தினர். இதில் பல பெண் மாணவர்கள் உட்படப் போராட்டக்காரர்கள் சிலர் காயமடைந்தனர்.

அதேசமயம், போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதில் 4 காவலர்களும் காயமடைந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கைகள்

JPSC மற்றும் JSSC தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ அல்லது ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். முறைகேடு நடந்த அனைத்துத் தேர்வுகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்துள்ளனர். இதில் பேச்சுவார்த்தைக்கு பின் JPSC நடத்திய தேர்வு ரத்து செய்யப்படுவதாக நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்ட நிலையில் JSSC-CGL தேர்வும் ரத்து செய்யப்பட வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்.

கைது

இதனிடையே ஆட்சேர்ப்பு தேர்வுகளில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் JPSC தலைவர் எல். கியாங்டேவை ஜார்க்கண்ட் சி.ஐ.டி. கைது செய்துள்ளதாக மாநில புலனாய்வு அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com