

ஜார்க்கண்ட் தேர்வுகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நேற்று (திங்கள்கிழமை) தீவிரமடைந்தது.
மாணவர்கள் சட்டமன்றத்தை நோக்கி பேரணி செல்வதை தடுக்க, காவல்துறையினர் நீரை பீய்த்து அடித்தும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை தடுத்தனர். அதேவேளையில், இந்த "முறைகேடுகள்" தொடர்பாக அமலாக்கத்துறை பணமோசடி விசாரணையையும் தொடங்கியுள்ளது.
ஆட்சேர்ப்பு தேர்வுகளில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் ஜே.பி.எஸ்.சி. தலைவர் எல். கியாங்டேவை ஜார்க்கண்ட் சி.ஐ.டி. கைது செய்துள்ளதாக மாநில புலனாய்வு அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாநிலத் தலைநகர் ராஞ்சியில், மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வந்த சட்டமன்றத்தை நோக்கி ஆயிரக்கணக்கான வேலை தேடுபவர்கள் பேரணியாக சென்றபோது, பல தடுப்புகளை மீறிச் சென்றதால், போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காவல்துறை நடவடிக்கையில் பெண்கள் உட்பட பல மாணவர்கள் காயமடைந்ததாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். அதே நேரத்தில், கல் வீச்சில் 14 அதிகாரிகள் காயமடைந்ததாகவும், "அமைதியான" போராட்டங்களை கலைத்த சமூக விரோதிகளை அடையாளம் காண சி.சி.டி.வி. காட்சிகள் ஆய்வு செய்யப்படும் என்றும் ராஞ்சி எஸ்எஸ்பி கூறினார்.
ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தங்கள் குறைகளை "பேச்சுவார்த்தை மற்றும் நம்பிக்கையின்" மூலம் தீர்க்க வேண்டும் என நேற்று (திங்கள் கிழமை) மீண்டும் வேண்டுகோள் விடுத்தார். மேலும், அரசியல் ஆதாயங்களுக்காக போராட்டக்காரர்களை தவறாக வழிநடத்த எதிர்க்கட்சியான பா.ஜ.க. முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
சட்டமன்றத்தை நோக்கிய பேரணி தொடங்குவதற்கு முன்பு சோரனின் வீட்டை முற்றுகையிட்ட பா.ஜ.க., மாணவர்களுக்கு எதிரான "வன்முறை பிரயோகத்தைக்" கண்டித்து இன்று (செவ்வாய் கிழமை) மாநிலம் தழுவிய பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
அமைதியான போராட்டங்கள் வன்முறையால் எதிர்கொள்ளப்படக்கூடாது என்று கூறிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காவல்துறையின் நடவடிக்கையைக் கண்டித்தார். ஜார்க்கண்டில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியின் கூட்டாளியாக காங்கிரஸ் உள்ளது.
"அமைதியான முறையில் போராட்டம் நடத்த மாணவர்களுக்கு உரிமை உண்டு, பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வுகளைக் கொண்டுவரும்" என்று கூறிய காங்கிரஸ் தலைவர், மாணவர்களின் குறைகளை விரைவில் தீர்க்குமாறு ஜார்க்கண்ட் அரசை வலியுறுத்தினார்.