

ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை, புதிய சுற்று பேச்சுவார்த்தைக்காக ஜார்க்கண்ட் அரசு அழைத்துள்ளதாக அதிகாரி தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தை இன்று (திங்கள் கிழமை) நடைபெறுகிறது.
போராட்டம் நடைபெற்ற இடமான ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில், துணைப் பிரிவு அதிகாரி மற்றும் சட்டம் ஒழுங்கு கூடுதல் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மாணவர்களுடன் நடத்திய கூட்டத்தை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
"ஆகஸ்ட் 17-ஆம் தேதியன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு போராட்டக்காரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் தங்களது சட்ட ஆலோசகருடன் கலந்துரையாடலில் பங்கேற்கலாம் என்ற முன்மொழிவும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது," என்று அந்த அதிகாரி கூறினார்.
முன்னதாக, ஜார்க்கண்ட் அரசுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கும் இடையே ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
போராட்டத்தை முன்னின்று நடத்தும் முக்கிய மாணவர் அமைப்பான 'ஜே.பி.எஸ்.சி.-ஜே.எஸ்.எஸ்.சி. சீர்திருத்தக் குழு', மாநில விருந்தினர் மாளிகையில் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அரசின் முன்மொழிவை போராட்டக்காரர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர், ஆனால் அவர்கள் தங்கள் கோரிக்கைகளில் இருந்து பின்வாங்க மாட்டார்கள் என்று கூறியுள்ளது.
போராடி வரும் மாணவர்களின் சட்ட ஆலோசகர் முன்னிலையில் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என 'ஜே.பி.எஸ்.சி.-ஜே.எஸ்.எஸ்.சி. சீர்திருத்தக் குழு' தலைவர் ரவீந்திர பஸ்வான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய பஸ்வான், "நாங்கள் இந்த பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புவதால், நிச்சயமாக பேச்சுவார்த்தைக்கு செல்வோம். ஆனால், ஆட்சேர்ப்பு தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை மற்றும் ஜே.எஸ்.எஸ்.சி-சி.ஜி.எல் (ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வு ஆணையம்-ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை) தேர்வுகளை ரத்து செய்வது ஆகிய இரண்டு கோரிக்கைகளில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்," என்று பஸ்வான் கூறினார்.
அரசு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள தூதுக்குழுவில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.
ஆகஸ்ட் 9 அன்று நடைபெற்ற கடைசி சுற்றுப் பேச்சுவார்த்தையில் எந்தவொரு திருப்புமுனையும் ஏற்படவில்லை. ஞாயிற்றுக்கிழமையன்று போராட்டங்கள் 23-வது நாளை எட்டின.