Video: "இந்தியாவைப் பற்றி நெகட்டிவ் மட்டும் காட்டாதீங்க!" - மும்பையில் வாழும் ஜப்பானிய பெண்!

தூய்மைக்குப் பெயர் போன ஜப்பானிலும் கூட எத்தனையோ அசுத்தமான இடங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
Hikaru San
Published on: 
Summary

இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இந்தியா குறித்துப் பரப்பப்படும் எதிர்மறையான மற்றும் தவறான கருத்துக்களை மும்பையில் வசித்து வரும் ஜப்பானியப் பெண் ஒருவர் மிகத் துணிச்சலாகக் கேள்வி எழுப்பியுள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.

"இந்தியாவுக்குக் குடிபெயர்ந்த பிறகு நான் உணர்ந்த விஷயங்கள்" (What I have realised since moving to India) என்ற தலைப்பில், ஜப்பானைச் சேர்ந்த பிரபல சமூக வலைத்தளப் பக்க உருவாக்குநரான ஹிகாரு-சான் தனது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

நேரில் வாழ்ந்தால் மட்டுமே உண்மை புரியும்

கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு இந்தியாவின் நிதிய தலைநகரமான மும்பைக்குக் குடிபெயர்ந்த ஹிகாரு-சான், இந்த இடமாற்றம் இந்தியா மீதான தனது பார்வையை முற்றிலுமாக மாற்றிவிட்டதாகக் கூறுகிறார். இது குறித்துப் பேசிய அவர், "ஒரு இடத்தின் நல்ல விஷயங்களை நாம் அங்கு நேரில் சென்று வாழும் வரை புரிந்து கொள்ள முடியாது.

இந்தியா என்பது மிகப் பெரிய நாடு, இடத்திற்கு இடம் சூழல் முற்றிலும் மாறுபடும். நான் மும்பையில் வசித்து வருவதால், இங்கு நான் பெற்ற அனுபவங்களின் அடிப்படையிலேயே இதைப் பேசுகிறேன்.

இந்தியாவின் உண்மையான அழகையும் பெருமையையும் உலகிற்கு எத்தனையோ பேர் காட்ட விரும்பியதற்கு இதுவே காரணம்" என்றார்.

வியூஸ்களுக்காக நடத்தப்படும் போலிப் பிரச்சாரம்

சமூக வலைத்தளங்களின் அல்காரிதம் பெரும்பாலும் இந்தியாவின் வறுமை, அசுத்தம் போன்ற எதிர்மறையான விஷயங்களை மட்டுமே முன்னிலைப்படுத்திப் புஷ் செய்வதாக அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், "இங்கு நான் வாழ்ந்த நாட்களில் இதுவரை எந்த ஒரு விசித்திரமான நபரையோ அல்லது மோசமான அனுபவத்தையோ எதிர்கொண்டது இல்லை. வியப்பளிக்கும் சில சிறிய விஷயங்கள் நடக்கின்றனவே தவிர, இணையத்தில் மக்கள் சத்தம் போட்டுப் பெரிதாக்கும் அளவுக்கு எந்த ஒரு அச்சுறுத்தலையும் நான் சந்திக்கவில்லை" என்று கூறினார்.

ஜப்பானிலும் அசுத்தமான இடங்கள் உள்ளன

ஒவ்வொரு நாட்டிற்கும் நல்ல பக்கமும் கெட்ட பக்கமும் உண்டு என்று குறிப்பிட்ட ஹிகாரு-சான், "வெறும் வியூஸ்களுக்காக ஒரு நாட்டின் நெகட்டிவ் பக்கத்தை மட்டுமே காட்டுவதில் என்ன பயன் இருக்கப் போகிறது?

இதனால் யாருக்கு மகிழ்ச்சி கிடைக்கப் போகிறது? ஒரு இடத்திற்குச் செல்வதற்கு முன்பு அதைப்பற்றித் தெரிந்துகொள்வது முக்கியம் தான், நானும்கூட அதைச் செய்வேன். ஆனால், தூய்மைக்குப் பெயர் போன ஜப்பானிலும் கூட எத்தனையோ அசுத்தமான இடங்கள் இருக்கத்தான் செய்கின்றன" என்று நெத்தியடியாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

இணையவாசிகளின் ஆதரவு

ஹிகாரு-சானின் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்திய இணையவாசிகள் பலரும் அவருக்குத் தங்களது நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு பயனர், "இந்தியாவின் மக்கள் தொகை பல கோடிகள்.

அதில் ஒரு சதவீதம் பேர் தவறானவர்களாக இருந்தாலும், அந்த எண்ணிக்கை மற்ற நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை விட அதிகமாக இருக்கும். அதனால் தான் இங்கு குற்றங்களின் எண்ணிக்கை அதிகமாகத் தெரிவது போன்ற பிம்பம் உருவாகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பயனரோ, "கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவுக்கு எதிராக இணையத்தில் திட்டமிட்டு நடத்தப்படும் இனவெறி மற்றும் எதிர்மறைப் பிரச்சாரங்களுக்கு இந்தப் பெண் கொடுத்த சரியான பதிலடி இது" என்று பாராட்டியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com