யார் ரீல்ஸ் போடுகிறார், யார் பத்திரிக்கையாளர் என்றே தெரியவில்லை: பெண் செய்தியாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு அரசு பதில்!

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் டெல்லி காவல்துறை வெளியிட்டிருந்தது.
யார் ரீல்ஸ் போடுகிறார், யார் பத்திரிக்கையாளர் என்றே தெரியவில்லை: பெண் செய்தியாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு அரசு பதில்!
Published on: 

“கையில் மொபைல் போன் வைத்திருப்பவர்கள் எல்லாம் தங்களை பத்திரிகையாளர் என்று கூறிக்கொள்கிறார்கள்” என்று டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பெண் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார்களுக்கு எதிராக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தனது வாதத்தை முன்வைத்துள்ளது.

ஞானேஷ்குமாருக்கு எதிராக டெல்லியில் இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் செய்தி சேகரித்தபோது, ​​டெல்லி காவல்துறையினரால் தாக்குதலுக்கும், பாலியல் துன்புறுத்தலுக்கும் உள்ளானதாகக் கூறப்படும் பெண் பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு கோரி மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்தமனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,

“தற்போதைய தொழில்நுட்பக் காலத்தில் மொபைல் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவருமே தங்களை பத்திரிகையாளர் என்று கூறிக்கொள்கிறார்கள்; இதில் யார் ரீல்ஸ் போடுபவர், யார் உண்மையான பத்திரிகையாளர் என்றே தெரியவில்லை” என தெரிவித்தார்.

“காவல்துறையினர் தங்களுக்கு எதிரான வழக்குகளைத் தாங்களே விசாரித்துக் கொள்ள முடியாது” என்று இந்திரா ஜெய்சிங் வாதாடினார்.

பெண்கள் தலைமையிலான விசாரணைக் குழு

இதனையடுத்து கூறப்படும் இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு குழுவை அமைப்பது குறித்து பரிசீலிக்கவுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இந்தக் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்று கூறிய தலைமை நீதிபதி சூர்ய காந்த், முன்மொழியப்படும் குழுவில் முன்னாள் பெண் நீதிபதிகளும், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகளும் இடம்பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.

கைது செய்ய இடைக்காலத் தடை

மேலும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் பத்திரிகையாளரைக் கைது செய்யவோ அல்லது அவர் மீது கடுமையான எவ்வித நடவடிக்கையும் எடுக்கவோ கூடாது என டெல்லி காவல்துறைக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார்.

இதற்கு அவர் விசாரணைக்கு ஒத்துழைத்தால் கைது செய்யப்பட மாட்டார் என்று சொலிசிட்டர் ஜெனரல் மேத்தா உறுதியளித்தார்.

என்ன நடந்தது?

அக்டோபர் 3 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தை பல பெண் சுயாதீனப் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது டெல்லி காவல்துறையின் உதவி ஆணையர் விவேக் பகத், வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள பெண் மற்றும் பிற பெண் பத்திரிகையாளர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், தவறாகத் தள்ளிவிட்டு அத்துமீறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக 3 பெண் பத்திரிகையாளர்கள் புகார் அளித்தும், 11 நாட்களாக டெல்லி காவல்துறை ஏசிபி விவேக் பகத் மீது எந்தவித எஃப்.ஐ.ஆர் வழக்கும் பதிவு செய்யவில்லை.

இதற்கிடையில், விவேக் பகத் கொடுத்த புகாரின் பேரில், டெல்லி காவல்துறை புகார் அளித்த பெண் பத்திரிகையாளர் மற்றும் அவரது சகாக்கள் மீது பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது.

அந்தப் பெண் பத்திரிகையாளர் தன்னை பொதுவெளியில் அவமானப்படுத்தியதாகவும், சாதி ரீதியான வசவுகளைப் பயன்படுத்தியதாகவும் காவல்துறை அதிகாரி தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் பத்திரிக்கையாளருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் மனுத்தாக்கல் செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com