

லடாக்கில் வரையறுக்கப்பட்ட 28 பகுதிகளுக்கும் புவியியல் அம்சங்களுக்கும் இந்தியா அதிகாரப்பூர்வ பெயர்களை வழங்கியுள்ளது.
லடாக்கில் வரையறுக்கப்பட்ட 28 பகுதிகளுக்கும் புவியியல் அம்சங்களுக்கும் வழங்கப்பட்ட புதிய பெயர்கள் இந்திய நில அளவைத் துறையின் அதிகாரப்பூர்வ வரைபடங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் தலைமையிலான லடாக் யூனியன் பிரதேச நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து இந்த இடங்கள் அடையாளம் காணப்பட்டன.
இவற்றைத் துல்லியமாகப் பதிவுசெய்து, பொதுமக்களுக்கு மேலும் பரிச்சயமாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தப் பட்டியலில் சிகரங்கள், மலைத்தொடர்கள், கணவாய்கள், பனியாறுகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள், ஏரிகள், நீர்நிலைகள் ஆகிய புவியியல் அம்சங்கள் அடங்கும்.
முக்கிய சிகரங்கள் அதிஷா கிரி, கனிஷ்க சிகரம், மார்த்தாண்ட கிரி, சோரவர் சிகரம், ரிஞ்சன் சாங்போ, சாக்யஸ்ரீ கிரி, மார்பா லோட்சவ ரி, மிலரேபா காங்க்ரி, சிவாரி மற்றும் மகேஷ்வர்ரி என பெயரிடப்பட்டுள்ளன.
கருண் பீர், டிராக் கார்போ மற்றும் ஜோல்மோரி ஆகியவை மலைத்தொடர்களாகவும், சாப்சிங்கல் கணவாய் மற்றும் ஷாக்மிர்க் கணவாய் ஆகியவை கணவாய்களாகவும் பட்டியலிடப்பட்டுள்ளன.
பர்பிக் மற்றும் ஸ்கம்ரி ஆகியவை பெயரிடப்பட்ட பனியாறுகள் ஆகும். ஷ்கோர்கா பள்ளத்தாக்கு, யாங்பா ஆறு, குரு ரின்போச்சே ஏரி மற்றும் வெந்நீர் ஊற்று ஆகியவையும் பட்டியலிடப்பட்டுள்ளன.
2020ஆம் ஆண்டு கல்வான் மோதலைத் தொடர்ந்து இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையே பதற்றம் அதிகமாக இருந்த கோக்ரா மற்றும் ஹாட் ஸ்பிரிங் பகுதிகளும் இந்தப் பட்டியலில் அடங்கும்.
கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு நெடுகிலும் இந்திய மற்றும் சீனாவின் ராணுவ இருப்பு தொடர்கிறது.
பல்வேறு சுற்று ராணுவ மற்றும் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, சில பகுதிகளில் இருந்து சீன ராணுவம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
சீனா சமீபத்தில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனப் பெயர்களைச் சூட்டி, அந்தப் பகுதிக்கு உரிமை கோரியது.
இந்தியா இந்தப் பெயர் மாற்றத்தையும் சீனாவின் உரிமைகோரல்களையும் நிராகரித்துள்ளதுடன், அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த நிலையில் லடாக்கில் உள்ள பகுதிகளுக்கு பெயர் வழங்கியதன் மூலம் இந்தியா தனது அதிகாரத்தை பறைசாற்றியுள்ளது.
இருப்பினும் பெயர் வழங்கல் குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையில் இந்திய உள்துறை அமைச்சகம் சீனா குறித்தோ அல்லது எல்லைப் பிரச்சினை குறித்தோ நேரடியாக குறிப்பிடவில்லை.