

மேற்கு ஆசியாவில் மோதல்கள் தீவிரமடைந்துள்ள சூழலில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு நேரடியாக விடுத்த செய்தியில், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், "அச்சுறுத்தல்" மற்றும் "அதிகாரத் திமிருக்கு" ஈரான் ஒருபோதும் பணியாது என்றும், தனது தேசிய நலன்களைப் பாதுகாக்க உறுதியுடன் நிற்கும் என்றும் அவர் கூறினார்.
மதத் தலைவர்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய பெசெஸ்கியான், வளைகுடா பிராந்தியத்திற்கான ஈரானின் தொலைநோக்கு பார்வையை விளக்கினார். அமைதியான சகவாழ்வுக்கான அர்ப்பணிப்பை வலியுறுத்திய அவர், அதேவேளையில் ஈரானிய சமூகத்திற்குள் "கருத்து வேறுபாடுகளை தூண்டும்" வெளிநாட்டு சக்திகளை முறியடிப்பதாகவும் உறுதியளித்தார்.
இதுகுறித்து பேசிய மசூத் பெசஸ்கியான், "நாங்கள் அடக்குமுறைக்கு ஒருபோதும் பணியமாட்டோம். இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் அடிபணியாததாலேயே அவற்றை எதிர்த்து நிற்கிறோம்; அவர்கள் எங்களை நெருக்கடிக்கு உள்ளாக்கினால், நாங்களும் அவர்களை திருப்பி தாக்குவோம்," என்று ஈரான் அதிபர் கூறினார்.
தெற்கு ஈரானில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளிக்கு அருகே அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 168 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய அவர், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளை "உண்மையான தீவிரவாதிகள்" என்று சாடினார்.
"மருத்துவமனைகள், உள்கட்டமைப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களை இலக்கு வைப்பதற்கு பதிலாக, அவர்கள் எங்கள் ராணுவ வீரர்களை நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாட்டால் மக்கள் பணிந்துவிடுவார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள்; ஆனால் ஈரானிய மக்கள் ஒருபோதும் பணியமாட்டார்கள்," என்று அவர் கூறினார்.
ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்கா புதிய வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ள சூழலிலும், கடுமையான பொருளாதாரத் தடைகள் மூலம் ஈரானுக்கு நெருக்கடி கொடுக்க வாஷிங்டன் முயற்சிக்கும் நிலையிலும், மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில் பெசஸ்கியானின் இந்த கருத்துகள் வெளியாகியுள்ளன.
பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக மூன்று நாள் பயணமாக ஈரான் அதிபர் பெசஸ்கியான் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை டெல்லி வந்தடைந்தார். இந்த நிகழ்வுக்கு முன்னதாக, ஈரான் அதிபர் பிரதமர் நரேந்திர மோடியுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்; இதில் மேற்கு ஆசியாவின் ஒட்டுமொத்த சூழல் மற்றும் இருதரப்பு உறவுகள் ஆகியவை முக்கியமாக விவாதிக்கப்பட்டன.