

பரஸ்பரமான உறவில் பிரிவி ஏற்பட்ட பிறகும்,அதற்கு முன் பரஸ்பர சம்மதத்துடன் நிகழ்ந்த உடல் ரீதியிலான நெருக்கத்தை பாலியல் வன்கொடுமையாக முத்திரைக் குத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர், தனக்கு எதிரான நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.
அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள் .வி. நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, வேண்டுமென்றே செய்யப்படும் ஏமாற்று அல்லது மோசடி காரணமாக ஆரம்பத்தில் இருந்தே பாலியல் சம்மதம் செல்லாததாக இருக்கும் வழக்குகளுக்கும், ஓர் உறவு முடிவுக்கு வந்த பிறகு பரஸ்பர சம்மதத்துடன் கூடிய நெருக்கம் குறித்து பிற்காலத்தில் வருந்தும் வழக்குகளுக்கும் இடையே வேறுபாடு காண வேண்டிய அவசியம் உள்ளது. என்று கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இத்தகைய சத்தர்பங்களில் ஒரு உறவு முடிந்துவிட்டாலோ அல்லது அந்த உறவு நீடிக்கவில்லை என்றாலோ , அந்த உறவில் கடந்த காலத்தில் நிகழ்ந்த உடல்ரீதியான நெருக்கத்தை பாலியல் வன்கொடுமையாக கருதமுடியாது எனக் கூறி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பரஸ்பர சம்மதத்துடன் கூடிய உறவில் இருப்பது பிற்காலத்தில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு வழிவகுக்கும் என்ற அச்சம், ஒருவரின் சுயமாக முடிவெடுக்கும் உரிமையை பறித்துவிடுகிறது. இத்தகைய சூழலில் அந்த உறவில் இருந்து விலகிக்கொள்ள அந்த நபருக்கு உரிமை இல்லை என்று கூற முடியுமா? இந்த முடிவை ஏமாற்று அல்லது மோசடி என்று கூற முடியுமா? நிச்சயமாக முடியாது.
தோல்வியுற்ற உறவுகள் குற்ற வழக்குகளாக மாற்றப்படும் கவலைக்குரிய போக்கை நாங்கள் நாங்கள் மீண்டும் காண்கிறோம்.
பரஸ்பர சம்மதத்துடன் ஏற்படும் ஒவ்வொரு உறவும் முறியும்போது, அது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டாக மாற்றப்படும்போது, அது கூறப்படும் குற்றத்தின் தீவிரத்தை குறைக்கிறது அல்லது குற்றச்சாட்டையே இல்லாமல் செய்துவிடுவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.எனவே, பாலியல் வன்கொடுமை மற்றும் மோசடி குற்றச்சாட்டுக்களில் இருந்து சந்தோஷ் குமார் விடுவிக்கப்படுகிறார் என தீர்ப்பளித்தனர்.
சந்தோஷ் குமார் தனது முதல் திருமணத்தை மறைத்து, ஏற்கெனவே விவாகரத்து ஆன ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் திருமணம் சட்டப்பூர்வமானது என்று நம்ப வைத்து அந்த பெண்ணை ஏமாற்றி அவர் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பெண், சந்தோஷ் குமார் மீது பாலியல் வன்கொடுமை, மோசடி, நம்பிக்கை துரோகம் ஆகிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.