கேடில் விழுச்செல்வம்.. 64 வயதில் எம்.டெக் தேர்ச்சி.. IIM-இல் சேர முயற்சி - சாதித்த முதியவர்

இவர் சிறந்த 10 மாணவர்களுள் ஒருவராகத் தேர்ச்சி பெற்றுள்ளார்.
 கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

"கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றவை யவை" - கல்வியை விட சிறந்த செல்வம் எதுவும் கிடையாது என்பது வள்ளுவர் வாக்கு

அவ்வகையில் வாழ்க்கையை வாழ்ந்து முடிந்துவிட்டதாக பலரும் ஓய்வெடுக்கும் வயதில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த முதியவர்கல்வியை தலைமேற்கொண்டுள்ளார்.

ஒய்வின்றி உழைப்பு

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா தனது 64 வயது தந்தையின் சாதனையை எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

அவரது 64 வயது தந்தை கடந்த 2022 இல் கடந்த அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இருப்பினும் வீட்டில் சும்மா இருக்க விரும்பாமல் உத்தரப் பிரதேசத்தின் மாநகராட்சிகளைக் கண்காணிக்கும் ஒழுங்குமுறை அமைப்பின் துணை தலைமை செயல் அதிகாரியாக மீண்டும் பணியில் இணைந்துள்ளார்.

பணிக்கு இடையில் படிப்பு

பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று கள ஆய்வுகளை மேற்கொள்வது இவரது பணி என்பதால், ஒவ்வொரு வாரமும் சுமார் 1,000 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய வேண்டியிருந்தது.

பயணங்களின் இடைப்பட்ட நேரத்தை பயன்படுத்தி படித்துள்ளார். கடந்த மாதம் தனது எம் டெக் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்தார்.

வகுப்பில் பெரும்பாலான மாணவர்கள் இவருடைய வயதில் பாதியளவு இருந்தபோதிலும், இவர் சிறந்த 10 மாணவர்களுள் ஒருவராகத் தேர்ச்சி பெற்றுள்ளார்.

64 வயதில் எம்டெக் பட்டம் பெற்றதோடு நிறுத்திவிடாமல், தனது அடுத்த இலக்காக இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (IIM) லக்னோவில் உள்ள Executive Education படிப்பிற்கு விண்ணப்பிக்க முடிவெடுத்துள்ளார்.

மகன் நெகிழ்ச்சி

மகன் ஷஷாங்க் கூறுகையில், "வாழ்க்கையின் ஓட்டத்தில் தங்களை காலத்திற்கு ஏற்ப புதுப்பித்து கொள்வதை பெரும்பாலானோர் மறந்துவிடுகிறார்கள்.

ஆனால், எனது தந்தை பணி மற்றும் வயதுச் சுமையை காரணம் காட்டாமல் படிப்புக்கு எப்போதும் முதலிடம் கொடுத்தார்.

அவருடைய மகனான நான் சுய முன்னேற்றத்திற்கான ஊக்கத்தை வெளியில் தேடத் தேவையில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி பலருக்கும் தங்களின் முதிய வயதிலும் கல்வி கற்கும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com