

மத்திய அரசு ஊழியர்கள் அலுவலக பணிகளுக்காக பயன்படுத்தும் மடிக்கணினிகளை நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, அவற்றை வைத்துக்கொள்ள அனுமதிக்கும் வகையில் சாதன கொள்முதல் கொள்கையை நிதி அமைச்சகம் திருத்தியுள்ளது.
மத்திய நிதி அமைச்சகம் நவம்பர் 10 அன்று சாதன கொள்முதல் கொள்கையை திருத்தி வெளியிட்டுள்ளது.
இது ஜூலை 2023 முதல் நடைமுறையில் இருந்த முந்தைய விதிகளுக்கு பதிலாக அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தப்பட்ட கொள்கையின் மூலம், அரசு அதிகாரிகளின் அலுவல் பணிகளுக்காக மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், நோட்பேடுகள், அல்ட்ராபுக்குகள், நோட்புக்குகள் போன்ற சாதனங்களை வாங்கிக்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகளின் மூலம், ரூபாய் 1.8 லட்சம் (வரிகள் உட்பட) வரையிலான விலையுள்ள ‘மேக்புக் ஏர் மற்றும் ப்ரோ’ சாதனங்களை சம்பந்தப்பட்ட துறைகள் வாங்க அனுமதிக்கப்படுகின்றன.
இருப்பினும், ரூ.1.8 லட்சம் உச்சவரம்பிற்கு தகுதி பெற, ஒரு சாதனம் 40 சதவீதத்திற்கும் அதிகமான ‘மேக்-இன்-இந்தியா’ உள்ளடக்கத்தை கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிளை தவிர மற்ற சாதனங்களுக்கு, அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச விலை ரூ.1.5 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வகையான சாதனங்களை பெறுவதற்கு, ஒரு அரசு ஊழியர் ஊதிய நிலை 12 மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளில் பணிபுரிய வேண்டும்.
இந்த வகையான குறிப்பிட்ட அரசு அதிகாரிகள், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தங்கள் மடிக்கணினிகளை தங்களுடன் வைத்து கொள்ளலாம் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆனால் சம்பந்தப்பட்ட துறைகள் முதலில், கணினிகளில் சேமிக்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரப்பூர்வ தகவல்களையும் அழிக்க வேண்டும் எனவும்,
நான்கு ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்பே ஓய்வு பெறுபவர்கள் அல்லது அரசு பணியை விட்டு விலகுபவர்கள் தங்கள் சாதனங்களை திருப்பி கொடுக்க வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சாதனங்கள் பொருளாதார ரீதியாக பழுதுபார்க்க முடியாத நிலையில் இருப்பதாக கண்டறியப்பட்டால் அன்றி, நான்கு ஆண்டு காலத்திற்குள் ஒரு அதிகாரி மற்றொரு சாதனத்தை பெறுவதை, இந்த விதிகள் தடுக்கின்றன.
மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் ஆலோசகர்கள் இதன் வரம்பிற்குள் வராது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.