

பாகிஸ்தானின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் நீர் உரிமைகளுக்கு ஆபத்து நேர்ந்தால், மே 2025 இல் கொடுத்ததை விட பலமான பதிலடியை கொடுப்போம் என இந்தியாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா ஆகஸ்ட் 15 (நாளை) சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது போல, பாகிஸ்தான் இன்று (ஆகஸ்ட் 14) தனது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் பஹல்காமில் 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாக இந்தியா மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. 2 நாட்கள் நீடித்த இந்த மோதல் மே 9 அன்று முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 13) தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த ஆண்டு இந்தியாவுடன் நிகழ்ந்த மோதல் மற்றும் அதில் சண்டையிட்ட பாகிஸ்தான் வீரர்களுக்கான யாதிர் ஐ பதா (வெற்றி நினைவிடத்தை) திறந்து வைக்கும் நிகழ்வில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி, பீல்டுக்கு மார்ஷல் அசிம் முனீர் மற்றும் முப்படை தளபதிகள் கலந்துகொண்டனர்.
இங்கு கடந்த ஆண்டு தாக்குதலின் புகைப்படங்கள் காட்சியப்படுத்தப்பட்டுள்ளன. மோதலில் பாகிஸ்தானே வென்றதாக அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் ஷெரீப், "யாதிர் ஐ பதா என்பது நமது உறுதிப்பாடு, விடாமுயற்சி மற்றும் எதிரிகள் மீதான நமது ஆயுத படைகளின் ஆதிக்கத்தை பிரதிபலிக்கிறது. நாட்டை காக்கும் சண்டையில் உயிரிழந்த நமது வீரர்களுக்கும், நமது பெருமித்திதிற்குமான நினைவுச்ச்சின்னம் இது " என்றார்.
"பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது. ஆனால் அமைதியை விரும்புவதை பலவீனமாக எடுத்துக்கொள்ள கூடாது.
கண்ணியத்துடனும் உறுதியுடனும் நாம் அமைதியை நாடுகிறோம். இந்த பிராந்தியத்தில் பாகிஸ்தான் அமைதிக்கான உத்தரவாதமாக விளங்குகிறது.
ஆனால் பாகிஸ்தானின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் நீர் உரிமைகளுக்கு ஆபத்து நேர்ந்தால், மே 2025 இல் கொடுத்ததை விட பலமான பதிலடியை கொடுப்போம்" என எச்சரித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திய இந்தியா, ஜம்மு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் செல்லும் நீரை கணிசமாக குறைத்துள்ளது.
இந்த நீரை விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்கும் பாகிஸ்தான் பெருமளவில் நம்பியுள்ளதால், நீரை திறந்துவிடும்படி இந்தியாவுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.