

எலக்ட்ரிக் வாகனங்கள், பேட்டரி தயாரிப்பு மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்குத் தேவையான லித்தியம், நிக்கல் போன்ற அத்தியாவசிய கனிமங்களுக்கு வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதை முற்றிலுமாக மாற்றியமைக்கும் நோக்கில் மற்றொரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தரவு உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், வெளிநாட்டு இறக்குமதியைத் தவிர்க்கவும் மத்திய அமைச்சரவை இரண்டு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.7,185.10 கோடியாகும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட இந்த முடிவுகள் நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, இந்தியாவின் புள்ளியியல் அமைப்பை மேம்படுத்தும் நோக்கில் 'விஸ்தார்' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ரூ.4,371.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இது 2026-27 முதல் 2030-31 வரையிலான ஐந்தாண்டு காலத்திற்குச் செயல்படுத்தப்படவுள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி துல்லியமான தரவுகளைச் சேகரிக்கவும், கொள்கை வகுப்பை எளிதாக்கவும் இந்தத் திட்டம் உறுதுணையாக இருக்கும்.
எலக்ட்ரிக் வாகனங்கள், பேட்டரி தயாரிப்பு மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்குத் தேவையான லித்தியம், நிக்கல் போன்ற அத்தியாவசிய கனிமங்களுக்கு வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதை முற்றிலுமாக மாற்றியமைக்கும் நோக்கில் மற்றொரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 'கேபெக்ஸ் ஆதரவு திட்டம்' மூலமாக ரூ. 2,814 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. லித்தியம் மற்றும் நிக்கல் செயலாக்க ஆலைகளை நாட்டில் அமைக்கும் நிறுவனங்களுக்கு மூலதன முதலீட்டில் 30 சதவீத மானியத்தை அரசு வழங்கவுள்ளது. இதன் மூலம் நாட்டில் இரண்டு லித்தியம் மற்றும் இரண்டு நிக்கல் ஆலைகள் அமைக்கப்படவுள்ளதுடன், எதிர்கால தொழில்நுட்ப தேவைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களை உள்நாட்டிலேயே முழுமையாகத் தயாரிக்கவும் இந்தத் திட்டம் வழிவகுக்கும்.