"நிதிஷ் குமாருக்காக 9 பேரை கொன்றேன்.." பேச்சு சர்ச்சை ஆனதால் பிளேட்டை மாற்றிய ஜே.டி.யு. எம்எல்ஏ

அரசியல் போட்டியாளரான நீரஜ் குமாருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியதற்கு அதிருப்தியை வெளிப்படுத்தியபோது இந்த கருத்தை அவர் தெரிவித்தார்.
அனந்த் குமார் சிங், நிதிஷ் குமார்
Published on: 
Summary

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அனந்த் குமார் சிங் தெரிவித்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஐக்கிய ஜனதா தள (JDU) தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான நிதிஷ் குமாரின் அரசியல் ஆதாயத்திற்காக தான் ஒன்பது பேரைக் கொன்றதாக கூறி அனந்த் குமார் சிங் பரபரப்பை ஏற்படுத்தினார்.

பின்னர் சில மணி நேரங்களிலேயே தனது வார்த்தைகளை அவர் மாற்றிக்கொண்டார். இது சர்ச்சையாகி உள்ளது.

சர்ச்சை கருத்து

அண்மையில் நடந்த நிகழ்வொன்றில் பேசிய அனந்த் சிங், "எனக்கு நிதீஷ் குமாருடன் நீண்டகால தொடர்பு உண்டு. அவர் கடினமான காலங்களில் இருந்தபோது நான் அவருக்குத் துணையாக நின்றேன். அவருக்காக நான் 9 பேரைக் கொன்றேன்" என்று கூறினார்.

பீகாரில் Patna Graduates தொகுதிக்கு நடைபெற உள்ள சட்ட மேலவை தேர்தலில், தனது அரசியல் போட்டியாளரான நீரஜ் குமாருக்கு கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கியதற்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியபோது இந்த கருத்தை அவர் தெரிவித்தார்.

பின்வாங்கல்

இந்தக் கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அனந்த் சிங் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கினார்.

தனது வார்த்தைகள் திரித்துக் கூறப்பட்டதாகக் கூறி, சில மணி நேரம் கழித்து அளித்த விளக்கத்தில், லாலு பிரசாத் யாதவின் ஆட்சிக்காலத்தில் தனது ஒன்பது ஆதரவாளர்கள் கொல்லப்பட்டதாகவும், தன் மீதும் ஒரு கொலை முயற்சி நடந்ததாகவுமே தான் கூற வந்தததாக தெரிவித்தார்.

நிதிஷ் குமாரை ஆதரித்ததாலேயே லாலுவின் பிரிவு இந்தக் கொடூரங்களைச் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

விமர்சனம்

அனந்த் சிங்கின் கருத்துக்களுக்கு ஐக்கிய ஜனதா தள கட்சி தேசிய செய்தித் தொடர்பாளர் ராஜீவ் ரஞ்சன் பிரசாத் பதிலளிக்கையில், இந்தக் கருத்துக்கள் தேவையற்றவை என்றும் நிதிஷ் குமாரின் அரசியல் வாழ்க்கை களங்கமற்றது என்றும் தெரிவித்தார்.

மறுபுறம், எதிர்க்கட்சியான லாலுவின் ஆர்ஜேடி, குற்றப் பின்னணி கொண்டவர்களுடன் கைகோர்த்ததற்காக நிதிஷ் குமாரை விமர்சித்துள்ளது. அரசியல் கொலைகளை வெளிப்படையாக அவர்கள் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com