சகோதரியாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்: சிஜேபி நிர்வாகிகள் கைதுக்கு மம்தா பானர்ஜி கண்டனம்!

ஜனநாயகத்தைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய தருணம் இது.
Mamata Banerjee
Published on: 
Summary

மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, சிஜேபி நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்குத் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். மேலும், நாட்டின் கோடிக்கணக்கான இளைஞர்களை நோக்கி, "சகோதரியாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்" என்று அவர் உறுதியளித்துள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் முக்கிய இடமாக விளங்கும் டெல்லி ஜந்தர் மந்தரில், இனிமேல் போராட்டம் நடத்த அனுமதியில்லை என்றும் அதற்கான மாற்று இடங்களையும் டெல்லி காவல்துறை அண்மையில் அறிவித்தது. இந்தத் தடையை மீறி ஜந்தர் மந்தருக்குள் நுழைந்ததாகக் கூறி, சிஜேபி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் சௌரவ் தாஸ், அசுதோஷ் ரன்கா மற்றும் அஜிங்கியா ஆகியோர் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் 5 நாள் காவல் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மம்தா பானர்ஜியின் எக்ஸ் தளப் பதிவு

இந்தக் கைது நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து மம்தா பானர்ஜி தனது சமூக வலைதளப் பதிவில், ஜனநாயக உரிமைக்காக எங்களுடைய முந்தைய தலைமுறையினரும் நாங்களும் கடுமையாகப் போராடியுள்ளோம்; அந்தப் போராட்டத்தை நாம் தொடர்ந்து செய்தாக வேண்டும். அசுதோஷ் ரன்கா மற்றும் சௌரவ் தாஸ் கைது செய்யப்பட்டுள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஜனநாயகத்தைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய தருணம் இது. இது ஒட்டுமொத்த தலைமுறையையும் அச்சுறுத்தி அமைதிப்படுத்தும் முயற்சியாகும். இதை எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நமது அரசியலமைப்பு உரிமைகளை நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது.

நாட்டின் பல பகுதிகளில் இதுபோன்ற ஜனநாயகப் படுகொலைகள் தொடர்ந்து அரங்கேறி வருவதாக குறிப்பிட்ட அவர், மேற்கு வங்கத்தில் உள்ள 14,000 மக்கள் காவல்துறையினரின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார். 'மக்களின், மக்களால், மக்களுக்காக' என்ற ஜனநாயகக் கோட்பாட்டை மறந்து செயல்படும் அரசு, தனது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருவதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

இறுதியாக, நாட்டின் இளம் தலைமுறையினருக்குத் தைரியம் ஊட்டும் வகையில், "கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு நான் சொல்கிறேன்; உங்கள் சகோதரி உங்களுடன் இன்றும், என்றும், எப்போதும் இருக்கிறேன். நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று நமது நாட்டைப் பாதுகாப்போம்" என்று மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com