

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில் பணத் தகராறு காரணமாக 7 மாத கர்ப்பிணி மனைவியை கணவனே மூங்கில் தடியால் அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹர்டோய் மாவட்டம் பில்கிராம் காவல் எல்லைக்குட்பட்ட மயோரா கிராமத்தைச் சேர்ந்த விஷால் பால் என்பவருக்கும், 24 வயதான கிரண் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில், கிரண் தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். தொழிலாளியாக வேலை செய்து வந்த விஷால், இரு தினங்களுக்கு முன்பு கொடுத்த பணத்திற்கு மனைவி கிரணிடம் கணக்கு கேட்டுள்ளார்.
கைவசம் இருந்த ரூ.2,000 தொகையை உடனடியாகச் செலவழிக்காமல் குடும்பத்தின் எதிர்காலத் தேவைகளுக்காகச் சேமிக்க வேண்டும் என்று கிரண் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த விஷால், மதுபோதையில் மூங்கில் தடியால் கிரணை கொடூரமாகத் தாக்கத் தொடங்கினார். இதைக் கண்டு பதறிய விஷாலின் தாய் பிரேமா சண்டையைத் தடுக்க முயன்றபோது, அவரையும் விஷால் தாக்கி வீட்டை விட்டு வெளியே தள்ளியுள்ளார்.
பயத்தில் அலறிய மாமியார் பிரேமா, அக்கம் பக்கத்தினரிடம் உதவி கேட்டு ஓடியுள்ளார். ஆனால் விஷாலின் கோபத்திற்குப் பயந்து யாரும் உதவிக்கு வரவில்லை. இறுதியில் 112 என்ற அவசர உதவி எண்ணிற்குத் தொடர்பு கொண்டு காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்து ஆபத்தான நிலையிலிருந்த கிரணை மீட்டு பில்கிராம் சமூக சுகாதார மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட கிரணைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவான குற்றவாளி விஷாலைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி கைது செய்தனர். பிரேதப் பரிசோதனைக்காக உடலைக் கைப்பற்றிய போலீசார், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.