

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், அம்ரோஹாவில் நடந்த இந்தச் சம்பவம் காவல் துறைக்கே துடைக்க முடியாத கறையை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், ஆன்மீகச் சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி 23 வயது நிரம்பிய ஹரியானா மாநில பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட உ.பி காவல் துறையைச் சேர்ந்த 2 அதிகாரிகள் மற்றும் சி.ஆர்.பி.எஃப் படையைச் சேர்ந்த 2 வீரர்கள் என மொத்தம் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஹரியானா மாநிலம் ஃபதேஹாபாத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட 23 வயது இளம் பெண்ணுக்கு, கடந்த 20-ஆம் தேதி ஒரு பெண் தோழி மூலம் அறிமுகம் கிடைத்துள்ளது. உ.பி.யின் அம்ரோஹாவில் உள்ள புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, முசாஃபர்நகரைச் சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் இன்ஸ்பெக்டர் மோஹித் என்பவரைச் சந்திக்க அந்தப் பெண் பணிக்கப்பட்டார்.
இதனை நம்பிய அப்பெண், கடந்த திங்கள்கிழமை அன்று சோனிபட்டில் மோஹிட்டைச் சந்தித்துள்ளார். அங்கிருந்து இருவரும் மீரட் நகருக்குச் சென்றுள்ளனர். அங்கு மோஹிட்டின் சக ஊழியரான ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் தலைமைக் காவலர் லால்ராம் யாதவ் என்பவரும் இவர்களுடன் இணைந்துகொண்டார்.
இதனைதொடர்ந்து செவ்வாய்க்கிழமை மாலை, மோஹித்தும் லால்ராம் யாதவும் காரில் அப்பெண்ணை ஹசன்பூர் பகுதிக்கு அழைத்து வந்தனர். வழியில் உத்தரப்பிரதேச காவல் துறையின் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய் தோமர் என்பவரைச் சாதாரண உடையில் காரில் ஏற்றிச் சென்றனர். பின்னர், அத்ராசி-ஹசன்பூர் சாலையில் உள்ள ஒரு பண்ணை வீட்டிற்குச் சென்று இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்தனர்.
காவல்துறை தலைமை காவலர் பிரமோத் என்பவர் அவர்களுக்கு உணவும் மதுபானமும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். அன்று இரவு, சி.ஆர்.பி.எஃப் அதிகாரி மோஹித், லால்ராம் யாதவ் மற்றும் உ.பி சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய் தோமர் ஆகிய மூவரும் அடுத்தடுத்து அந்தப் பெண்ணை அச்சுறுத்திப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மூவரின் கொடூரத்தைத் தொடர்ந்து, நான்காவதாகத் தலைமைக் காவலர் பிரமோத் அறைக்குள் நுழைந்து அப்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். ஆனால், மன தைரியத்துடன் செயல்பட்ட அப்பெண், பிரமோத்தை பலமாக வெளியே தள்ளி கதவை உட்புறமாகப் பூட்டிக்கொண்டார். பின்னர் தனது செல்போனில் இணையம் மூலமாக அவசரக் காவல் உதவி எண்ணை தேடிக் கண்டுபிடித்து, அதிகாலை 6 மணி அளவில் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்தவுடன் ஹசன்பூர் மற்றும் ராஜாஜ்பூர் காவல் நிலையப் படைகள் விரைந்து வந்து பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர். சம்பவ இடத்திலேயே குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
அம்ரோஹா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் லக்கன் சிங் யாதவ் கூறுகையில், "பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கடத்தல் மற்றும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 4 பேரும் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்" என்றார். சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய் தோமர் மீது துறைரீதியான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், கைது செய்யப்பட்டுள்ள 2 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய போலீஸ் படை தலைமையகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த பண்ணை வீடு உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினருக்குச் சொந்தமானது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதை அடுத்து, பண்ணை வீட்டின் மேலாளரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பு அளிக்க வேண்டிய சீருடைப் பணியாளர்களே இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இது குறித்துத் தெரிவிக்கையில், "குற்றங்களை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி நடத்தும்போது, காவல் துறையும் முழுமையாகச் சீரழிந்து விடுகிறது. அம்ரோஹாவில் நடந்த இந்தச் சம்பவம் காவல் துறைக்கே துடைக்க முடியாத கறையை ஏற்படுத்தியுள்ளது. தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.