குஜராத்தில் ரூ.12 கோடியில் பிரம்மாண்ட செயற்கை மழைக்காடு - சுற்றுலாத்துறையில் புதிய மைல்கல்

காடு முழுவதும் 20 சிறப்பு மழை துப்பாக்கி கோபுரங்கள் நிறுவப்பட்டு செயற்கை மழை பொழிய செய்யப்படுகிறது.
குஜராத்தில் ரூ.12 கோடியில் பிரம்மாண்ட செயற்கை மழைக்காடு - சுற்றுலாத்துறையில் புதிய மைல்கல்
Published on: 
Summary

குஜராத்தில் 12 ஏக்கர் பரப்பளவில் ரூ.12 கோடி செலவில் பிரம்மாண்டமான செயற்கை மழைக்காடு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையம் ஆண்டு முழுவதும் மழைக்காலத்தின் இயற்கை எழிலை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

குஜராத்

உலகளவில் சுற்றுலாத்துறை நாளுக்கு நாள் புதிய பரிமாணங்களை எட்டி வருகிறது. பயணிகளை ஈர்க்கும் வகையில் இயற்கை எழிலோடு கூடிய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் புதுமையான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஏக்தா நகரில் உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் பட்டேலின் ‘ஒற்றுமை சிலை' உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்கிறது.

சுற்றுலாப் பயணிகள்

இங்கு வரும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை மேலும் கவரும் வகையிலும், அவர்கள் ஏக்தா நகரில் அதிக நேரம் மகிழ்ச்சியாக செலவிடும் வகையிலும் நவீன வசதிகளுடன் கூடிய புதிய இயற்கை சார்ந்த உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

செயற்கைக்காடு

அதன் ஒரு பகுதியாக அங்கு வருகை தரும் பயணிகளுக்கு முற்றிலும் புதிய மற்றும் சிலிர்ப்பான அனுபவத்தை வழங்கும் நோக்கில் 12 ஏக்கர் பரப்பளவில் ரூ.12 கோடி செலவில் பிரம்மாண்டமான செயற்கை மழைக்காடு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையம் ஆண்டு முழுவதும் மழைக்காலத்தின் இயற்கை எழிலை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோடைக்காலம் மற்றும் மழைக்காலம் இல்லாத ஏனைய நாட்களிலும் இங்கு வரும் பயணிகள் மழைசாரலின் மாயாஜாலத்தை நேரில் கண்டு மகிழ முடியும்.

சிறப்பம்சங்கள்

இந்த காடு முழுவதும் 20 சிறப்பு மழை துப்பாக்கி கோபுரங்கள் நிறுவப்பட்டு செயற்கை மழை பொழிய செய்யப்படுகிறது. மேலும் காட்டின் உட்புற வெப்பநிலை எப்போதும் 25 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே இருக்கும் வகையில் பராமரிக்கப்படுகிறது. பசுமையான நில வடிவமைப்புடன் அமைக்கப்பட்டுள்ள இந்த வனப்பகுதியில் குமிழி நீரூற்றுகள், செயற்கை நீர்வீழ்ச்சிகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல வகையான அபூர்வ மரங்கள் நடப்பட்டு இயற்கை வளம் கொஞ்சும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

கண்ணாடிப்பாதை

இத்திட்டத்தின் மிக முக்கிய சிறப்பம்சமாக கோபுரத்தை சுற்றி 11 மீட்டர் உயரத்திலும் 22 மீட்டர் விட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ள வளைந்த வட்ட வடிவ கண்ணாடி ஆகாய நடைபாதை திகழ்கிறது. இதன் கட்டுமானத்திற்காக 35 மில்லிமீட்டர் தடிமன் கொண்ட 132 வளைந்த கண்ணாடி தகடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த தகடுகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு அகமதாபாத்தில் சிறப்பு வடிவமைப்பு செய்யப்பட்ட பின் இங்கு கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் இந்த ஒளிபுகும் நடைபாதையில் நடந்து செல்லும்போது கீழே விரிந்து கிடக்கும் பசுமை மழைக்காட்டை கண்டு சிலிர்க்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி

ஒற்றுமை சிலையிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் கோரா பாலம் அருகே அமைந்துள்ள இந்த மையம் இந்தியாவில் இதுபோன்ற வசதியுடன் கூடிய முதல் சுற்றுலா திட்டமாக கருதப்படுகிறது. வரும் 31-ந்தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடியால் இது முறைப்படி திறந்து வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com