தீபாவளியையொட்டி அயோத்தியில் பிரமாண்ட யாத்திரை: 30 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றி உலக சாதனை படைக்க ஏற்பாடு

அயோத்தி வீதிகளில் பயணிக்கும் இந்த சோபா யாத்திரையைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் சாலையின் இருமருங்கிலும் திரண்டு நின்று மலர்களைத் தூவி வரவேற்கின்றனர்.
அகல் விளக்குகள்
Published on: 
Summary

தீபாவளியையொட்டி அயோத்தியில் 30 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றி உலக சாதனை படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராமாயணக் கதைகளை மையமாகக் கொண்ட 18 அலங்கார ஊர்திகள் மற்றும் 2,100 டிரோன்கள் மூலம் பிரமாண்ட ஒளிக்காட்சிகள் நடத்தப்பட்டு, சரயு நதிக்கரையில் மகா ஆரத்தி நிகழ்வு நடைபெறுகிறது.

தீபாவளியை முன்னிட்டு ராமபிரான் பிறந்த அயோத்தியில் தீப உற்சவம் கொண்டாடப்படுகிறது. இது ஆண்டுதோறும் பிரமாண்டமாக ஒளித்திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 14 ஆண்டுகள் வனவாசத்திற்குப் பிறகு ஸ்ரீராமர், சீதை மற்றும் லட்சுமணனுடன் அயோத்திக்குத் திரும்பியதை வரவேற்கும் விதமாக இந்த விழா தீபாவளியையொட்டி நடத்தப்படுகிறது.

18 அலங்கார ஊர்திகள்

இந்த ஆண்டின் பிரதான தீப ஒளித்திருவிழா நிகழ்வுகள் இன்று நடைபெறுகின்றன. இதையொட்டி ராமாயணக் கதைகளை மையமாகக் கொண்ட 18 அலங்கார ஊர்திகள் பங்கேற்ற பிரமாண்ட சோபா யாத்திரை இன்று காலை தொடங்கியது. ஊர்வலம் அயோத்தியின் புகழ்பெற்ற சாகேத் மகா வித்யாலயாவில் தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மதியம் ராம் கதா பூங்காவை அடைகிறது. ராமாயணத்தின் காவியக் கதைகளை உலகிற்குப் பறை சாற்றும் வகையில் 18 பிரமாண்ட அலங்கார ஊர்திகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. ஸ்ரீராமரின் பிறப்பு, விஸ்வாமித்திரருடன் யாகம் காத்தல், சீதா கல்யாணம், வனவாசம், லங்கா தகனம், மற்றும் ராவண வதம் போன்ற முக்கிய காட்சிகள் தத்ரூபமான சிலைகள் மற்றும் வண்ணமயமான அலங்காரங்களுடன் இந்த ஊர்திகளில் காட்சிப்படுத்தப்பட்டன. தகவல் தொழில் நுட்பம் மற்றும் நவீன கலை நுணுக்கங்களைப் பயன்படுத்தி இந்த ஊர்திகள் உத்தரப்பிரதேச கலாச்சாரத் துறையால் பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டன.

100 கலைஞர்கள்

இந்த யாத்திரையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்களின் பிராந்திய நடனங்கள் மற்றும் இசை வாத்தியங்களுடன் பங்கேற்றார்கள்.

மேலும், கம்போடியா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற 12-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சர்வதேச ராமலீலா கலைஞர்களும் இந்த ஊர்வலத்தில் ராமாயணக் கதாபாத்திரங்களின் உடைகளை அணிந்து அணிவகுத்துச் சென்றனர்.

இந்த சோபா யாத்திரை மதியம் ராம் கதா பூங்காவை அடைந்ததும், அங்கிருந்து தீப உற்சவத்தின் அடுத்த முக்கிய நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன. ஊர்வலத்தின் தொடர்ச்சியாக ஸ்ரீ ராமர், சீதை, லட்சுமணர் வேடமிட்ட கலைஞர்கள் ஹெலிகாப்டர் (புஷ்பக விமானம்) மூலம் இறங்கி வர, அவர்களுக்கு முறைப்படியான அரியணை ஏறும் ராஜ்யாபிஷேக விழா மேடையில் நடத்தப்படும்.

30 லட்சம் அகல் விளக்கு

அயோத்தி வீதிகளில் பயணிக்கும் இந்த சோபா யாத்திரையைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் சாலையின் இருமருங்கிலும் திரண்டு நின்று மலர்களைத் தூவி வரவேற்கின்றனர்.

இன்று இரவு அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரை மற்றும் ராம் கி பைடி ஆகிய பகுதிகளில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட அகல் விளக்குகளை ஏற்றி புதிய உலக சாதனை படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புதிதாகக் கட்டப்பட்ட பிரம்மாண்ட ஸ்ரீ ராம் ஜென்மபூமி வளாகத்தில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான விளக்குகள் ஏற்றப்பட்டு தெய்வீக ஒளியில் ஜொலிக்கிறது. மேலும் ராமாயணத்தின் முக்கிய காட்சிகளையும், பிரபு ஸ்ரீராமர் அயோத்திக்குத் திரும்பும் காட்சியையும் விவரிக்கும் வகையில் 2,100 டிரோன்களைக் கொண்டு பிரமாண்ட வான்வெளி ஒளிக்காட்சியும், 3டி லேசர் காட்சிகளும் நடத்தப்படுகின்றன.

மாலை 5:45 மணியளவில் 1,100-க்கும் மேற்பட்ட சாமியார்கள் மற்றும் பூசாரிகள் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட சரயு நதி மகா ஆரத்தி நடைபெறுகிறது.

உத்தரப்பிரதேச சுற்றுலாத் துறையின் முறைப்படியான வழிகாட்டுதலின் படி பாதுகாப்பு காரணங்களுக்காக ராம் கி பைடி பகுதிக்குச் செல்ல சிறப்பு அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. பொது மக்கள் இந்த பிரமாண்ட காட்சிகளைக் காண நகரின் பல்வேறு இடங்களில் பெரிய எல்.இ.டி. திரைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

X