

விமானியாக பறப்பதை விட அதில் பயணிக்கும் பயணிகள் உயிர் மீது பொறுப்பு இருக்க வேண்டும் என்று ஸ்மித் மச்சார் ஆரம்பத்தில் தெரிவித்ததை போலவே நெருக்கடி நேரத்திலும் அதை நிரூபித்து காட்டி உள்ளார்.
விமானியாக பறப்பதை விட பயணிகளின் உயிர் மீது இருக்கும் பொறுப்புதான் ஆரம்பத்தில் எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
இதுதான் இன்று உலகமே பாராட்டும் இந்திய விமானி ஸ்மித் மச்சார் முதல் முதலில் விமானத்தை இயக்கியபோது ஏற்பட்ட அனுபவம் என்று கூறியிருந்தார். அந்த பொறுப்புணர்வால்தான் பேராபத்தையும் மிகச் சாதுர்யமாக அதேநேரம் துணிச்சலுடன் எதிர்கொண்டு பயணிகள் அனைவரையும் பத்திரமாக காப்பாற்றி இருக்கிறார்.
துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு விமானம் 40 ஆயிரம் அடி உயரத்துக்கு மேல் பறந்து கொண்டிருந்தது. அப்போதுதான் துணை விமானி தனது திட்டத்தை நிறைவேற்ற ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்தி நிலை குலைய செய்துள்ளான்.
இதனால் 14 ஆயிரம் அடி வரை விமானம் சர்ரென்று சாய்ந்து இருக்கிறது. அடுத்த சில வினாடிகளில் விமானம் எங்காவது விழுந்து நொறுங்கப் போகிறது என்பதை உணர்ந்த மச்சார் உடனடியாக காக்பிட் கதவை திறந்து பயணிகளை வரவழைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர செய்துள்ளார்.
அபாரமான துணிச்சல் தான் அந்த இந்திய விமானிக்கு என்று உலகம் முழுவதும் விமானப் பயணிகளும், விமானிகளும் மெய்சிலிர்க்க பாராட்டுகிறார்கள்.
உண்மையில் ஸ்மித் மச்சார் எப்படிப்பட்டவர் என்பதை அவரது நெருங்கிய நண்பர்களும், பக்கத்து வீட்டுக்காரர்களும் நினைவு கூர்ந்தார்கள்.
அமைதி, நிதானம், பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர் ஸ்மித் மச்சார் என்கிறார்கள் அவரது நண்பர்கள். திறமை, ஒழுக்கம், சிறப்பான பயிற்சி கொண்டவர் மச்சார் என்கிறார்கள் அவருக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள்.
கடந்த 2022 வரை மும்பையின் திலக் நகரில் தான் குடியிருந்தார். மச்சாருடன் 15 வருடங்களாக நண்பராக இருக்கும் டாக்டர் ஜினித்ஷா கூறும்போது, மச்சார் மிகவும் திறமையானவர். மென்மையாக பேசக்கூடியவர். நல்ல உள்ளம் கொண்டவர். எதிலும் வேகமாக முடிவெடுப்பார். அவரது இந்த குணம்தான் நெருக்கடியான நேரத்திலும் அவசரமாக முடிவெடுக்க வைத்துள்ளது என்றார்.
மும்பையில் மச்சார் வீட்டின் அருகே வசிக்கும் அக்ஷய் தோஷி கூறும்போது, யாருக்காவது உதவி தேவைப்பட்டால் எதையும் யோசிக்காமல் ஓடிவந்து உதவி செய்வார் என்றார்.
தான் விமானி ஆக வேண்டும் என்ற கனவெல்லாம் மச்சாருக்கு இருந்ததில்லை. குடும்பத்தினர் செய்து வரும் ஜவுளித்தொழிலில் ஈடுபடவே விரும்பி இருக்கிறார். எனவே டெக்ஸ்டைல் என்ஜினீயரிங் படித்து இருக்கிறார். தனது 19-வது வயதில் விமான போக்குவரத்து தொடர்பான ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டார். அதன் பிறகே விமானி ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நியூசிலாந்து சென்று விமான பயிற்சி பெற்றுள்ளார்.
2008 முதல் 18 மாதங்கள் மெயின்லேன்ட் நிறுவனத்தில் பயிற்சி எடுத்துள்ளார். பயிற்சியின்போதும் முன்னணி மாணவராக இருந்ததாக அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிலிப்கென் தெரிவித்துள்ளார். தேர்வுகளிலும், விமான பயிற்சிகளிலும் சிறப்பாக செயல்பட்டு தனது பயிற்சி காலத்தை வெற்றிகரமான நிறைவு செய்தார். பொதுவாக மற்ற மாணவர்களிடம் இருந்து அவர் தனித்து காணப்பட்டவர் என்றும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
பயிற்சி முடித்த பிறகும் அந்த நிறுவனத்துடன் தொடர்பில் இருந்தபடியே இந்தியாவில் இருந்து பல மாணவர்களை அங்கு பயிற்சிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
முதலில் இந்திய விமானமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில்தான் விமானியாக வேலையில் சேர்ந்துள்ளார். போயிங் 737 ரக விமானங்களை ஆயிரக்கணக்கான மணி நேரங்கள் இயக்கிய அனுபவம் பெற்றவர் மச்சார்.
2017-ல் தனது சக 3 விமானி நண்பர்களுடன் இணைந்து மும்பையில் விமான பயிற்சி பெற விரும்பும் மாணவர்களுக்காக மும்பையில் ஒரு பயற்சி நிறுவனத்தை தொடங்கினார்.
இளம் விமானிகளுக்கு மிகச்சிறந்த வழிகாட்டியாகவும் இருக்கிறார். தற்போது விமானத்துக்குள் ஏற்பட்ட அசாதாரண ஆபத்தான சூழ்நிலையில் காயம் அடைந்த பிறகும் காக்பிட் கதவை திறந்து பயணிகளை வர வைத்தது அவரது சமயோசித புத்தியை காட்டுவதாக குறிப்பிட்டார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்பு தங்களிடம் பயிற்சி பெற்ற மாணவர் இவ்வளவு கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டது அதிர்ச்சியாகவும், பெருமையாகவும் இருப்பதாக நியூசிலாந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
மச்சார் எப்போதுமே அமைதியானவர். நெருக்கடியான சூழ்நிலையிலும் பதற்றப்படாமல் இருப்பார் என்பதுதான் அவரைப் பற்றி எல்லோரும் கூறுவது.
விமானியாக பறப்பதை விட அதில் பயணிக்கும் பயணிகள் உயிர் மீது பொறுப்பு இருக்க வேண்டும் என்று அவர் ஆரம்பத்தில் தெரிவித்ததை போலவே நெருக்கடி நேரத்திலும் அதை நிரூபித்து காட்டி உள்ளார்.
கேப்டன் ஸ்மித் மச்சார் சுமை ஏற்றுபவர்கள், பொறியாளர்கள், தரைப்பணியாளர்கள், உணவு வழங்குபவர்கள் என அனைவரிடமும் சமமான மரியாதையுடன் பழகிய ஒரு விமானியாக இருந்தார். “நீங்கள் சந்திக்கக்கூடிய நபர்களிலேயே ஸ்மித் மிகவும் அமைதியான, நிதானமான மற்றும் எளிமையானவர்,” என்று விமானப் பயிற்சிப் பள்ளி காலத்திலிருந்தே நண்பராக இருக்கும் கேப்டன் தாரவ் கோசாலியா நெகிழ்ச்சியுடன் கூறினார்.