கோவில் சன்னதியில் தலையை மோதி 10 வயது மகனை பலிகொடுத்த தந்தை.. சடலத்தின் அருகே உறங்கிய கோரம்

பாரதிபென் தன் கணவரை எழுப்பி என்ன நடந்தது என்று கேட்டபோது, ​​அவர் அளித்த பதில் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
crime
Published on: 
Summary

குஜராத்தில் மகன் தன்னைப்போல குறிசொல்பவனாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக அவனை தந்தை பலி கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டம், சனந்த் தாலுக்காவில் விஞ்சியா கிராமத்தை சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி நரேஷ் படேல். இவரது மனைவி பாரதிபென். 10 வயது மகன் சரண் பள்ளியில் படித்து வந்தான்.

வாக்குவாதம்

சுமார் 10 நாட்களுக்கு முன்பு, பாரதிபென்னுக்கும் நரேஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நரேஷ் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தால் மனமுடைந்த பார்திபென், தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். கரணுக்குத் தேர்வுகள் இருந்ததால், அவரை அவனது தந்தையிடம் விட்டுச் சென்றார்.

நவம்பர் 1 ஆம் தேதி மாலையில், பக்கத்து வீட்டுக்காரர் பாரதிபென்னை அழைத்து, நரேஷ் கரணை தாக்கியதாக கூறவே, அவர் பெற்றோர், சகோதரனுடன் கணவர் வீட்டுக்கு பதறியடித்து சென்றுள்ளார்.

ரத்தக் கறை

பாரதிபென் அன்றிரவு இரவு 9 மணியளவில் வீட்டிற்கு சென்றடைந்தார். அவர்களுடைய வீட்டருகே ஜோகனிமாதா என்ற கோவில் சன்னதி ஒன்று இருந்தது.

அங்கே, கரண் உடல் முழுவதும் ரத்தக் கறையுடன் ஒரு கட்டிலில் கிடப்பதை பாரதி பென் கண்டார். பரிசோதித்து பார்த்தபோது அவன் இறந்து கிடந்தது தெரியவந்தது.

அருகிலிருந்த மற்றொரு கட்டிலில் தந்தை நரேஷ் ரத்தக் கறை படிந்த ஆடைகளுடன் உறங்கிக்கொண்டிருந்தார்.

கொலை

பாரதிபென் தன் கணவரை எழுப்பி என்ன நடந்தது என்று கேட்டபோது, ​​அவர் அளித்த பதில் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

நரேஷ் கூறுகையில், அவருடைய தந்தை ஜோகனி மாதாஜியின் குறிசொல்பவராக இருந்ததாகவும், தானும் அவ்வாறே ஆகிவிட்டதாகவும் தனக்குப் பிறகு தன் மகன் ஒரு குறிசொல்பவராக ஆவதை விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

எனவே கோவிலுக்கு முன்னால் சிறுவன் கரணை இரு கால்களையும் பிடித்து அவனை தலையை இரண்டு மூன்று முறை தரையில் அடித்தும் தலையில் தடியால் தாக்கியும் கொன்றுவிட்டதாகவும் நரேஷ் கூறியுள்ளார்.

அதன்பின் கட்டிலில் சிறுவனின் சடலத்தை கிடத்திவிட்டு அருகில் இருந்த கட்டிலில் தானும் அவர் உறங்கியுள்ளார்.

கைது

பாரதிபென் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவே சனந்த் காவல்துறையினரும் மூத்த அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

காவல்துறையினரும் தடயவியல் குழுவினரும் சம்பவ இடத்தை ஆய்வு செய்த நிலையில், கரணின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

நரேஷ் மீது பாரதிபென் அளித்த புகாரின் பேரில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து நரேஷை கைது செய்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. நரேஷ் படேல் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

X