5 வயது மகளை கொன்று பிரிட்ஜில் வைத்துவிட்டு தற்கொலை செய்த தந்தை

மகளுக்குப் புதிய வெள்ளை நிற ஆடைகளை அணிவித்து, தலையில் துப்பட்டா போட்டு, உதடுகளில் துளசி இலைகளை வைத்துப் பூஜை செய்துள்ளார்.
தற்கொலை
தற்கொலை
Published on
Summary

குஜராத்தில் கடன் சுமை காரணமாக 5 வயது மகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்த சோகம் நிகழ்ந்துள்ளது.

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் ராஜுலா பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் தனக் (40).

கடந்த செப்டம்பர் 14 அன்று இவரது மனைவி மஞ்சுபென் தங்கள் 5 வயது மகள் ஹிமான்ஷியை கிஷோரிடம் விட்டுவிட்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார்.

புதன்கிழமை அன்று கிஷோரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றபோது அழைப்பை அவர் ஏற்காததால், மஞ்சுபென் தனது சகோதரரை வீட்டிற்குச் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.

பூட்டியிருந்த வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கிஷோர் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட சோதனையில், படுக்கையில் கிஷோர் எழுதி வைத்திருந்த 3 தற்கொலைக் கடிதங்கள் கைப்பற்றப்பட்டன.

தற்கொலை - கொலை

கடன் பெற்று, அந்தப் பணத்தைக் கட்டுமானப் பணிகளில் முதலீடு செய்திருந்ததாகவும், தொழிலதிபர் நண்பர்களிடமிருந்து தனக்கு வர வேண்டிய ரூ.7.25 லட்சம் பணம் இன்னும் வந்து சேரவில்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். பணப் பிரச்சனையால் வேறு வழி தெரியாமல் மகளுடன் தற்கொலை செய்வதாக எழுதியிருந்தார்.

தனது இறப்பிற்கு பிறகு மகள் கஷ்டப்படக் கூடாது என்பதால் அவளைக் கொன்றதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ள கிஷோர், மகளின் உடலைப் பிரிட்ஜில் வைத்திருப்பதாக அதில் குறிப்பிட்டிருந்தார். இதை வாசித்த பின் அதிர்ந்த போலீசார் பிரிட்ஜை சோதனையிட்டபோது அதில் சிறுமி ஹிமான்ஷியின் சடலம் இருந்துள்ளது.

கடைசி கொண்டாட்டம்

தற்கொலைக்கு முன்பாகத் தனது மகள் ஹிமான்ஷிக்கு பிறந்தநாள் போல அந்த அறையைப் பலூன்கள் மற்றும் மெழுகுவர்த்திகளால் கிஷோர் அலங்கரித்துள்ளார்.

மகளுக்குப் புதிய வெள்ளை நிற ஆடைகளை அணிவித்து, தலையில் துப்பட்டா போட்டு, உதடுகளில் துளசி இலைகளை வைத்துப் பூஜை செய்துள்ளார்.

அறையிலும் பிரிட்ஜூகுள்ளும் சாக்லேட்டுகளை வைத்து, பிரிட்ஜ் கதவில் "ஹேப்பி பர்த்டே ஹிமான்ஷி" என்று காகிதத்தில் எழுதி ஒட்டியுள்ளார்.

அன்று குழந்தைக்குப் பிறந்தநாள் இல்லை என்றபோதிலும் அவர் இப்படி செய்துள்ளார். இதைச் செய்து பின், மகளை மூச்சு திணறச் செய்து கொன்று பிரிட்ஜில் வைத்துள்ளார்.

இதுதொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்துள்ள ராஜுலா காவல்துறை, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

தற்கொலை தீர்வல்ல

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம்.

தற்கொலை எண்ணங்கள், மனநல பிரச்சனைகளில் இருந்து விடுபட, உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணிநேரமும் செயல்படும்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணிநேரம் செயல்படும்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019

X

Maalai Malar
www.maalaimalar.com