

ஆய்வகச் சோதனையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிக அளவில் ஆபத்தான கன உலோகங்கள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இணையவழி வர்த்தக தளங்களில் ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்டது’ என கூறி விற்கப்பட்டு வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு பிரபல அழகுசாதனக் கிரீம்களைப் பொதுமக்கள் வாங்கவோ பயன்படுத்தவோ வேண்டாம் என்று மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (CDSCO) தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்பொருட்களில் நச்சுத்தன்மை கொண்ட கன உலோகங்கள் அதிகளவில் இருப்பதும், அவசியமான இறக்குமதி உரிமம் இன்றி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டதும் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள பொது சுகாதார அறிவிப்பின்படி, கோரி பியூட்டி கிரீம் மற்றும் சாந்தினி ஒயிட்னிங் கிரீம் ஆகிய இரு தயாரிப்புகளும் தகுதியான அதிகாரிகளிடம் எந்தவொரு இறக்குமதி பதிவுச் சான்றிதழும் பெறாமல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. .
மேலும், ஆய்வகச் சோதனையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிக அளவில் ஆபத்தான கன உலோகங்கள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கிரீம்களைத் தொடர்ந்து பயன்படுத்துவது தோல் நோய்கள் மட்டுமன்றி, உடலில் பல்வேறு தீவிர நச்சு விளைவுகளையும் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும் என சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்
இந்த இரண்டு அழகுசாதனப் பொருட்களையும் வாடிக்கையாளர்கள் உடனடியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், ஏற்கனவே வாங்கி வைத்திருப்பவர்கள் அவற்றை தூக்கி எறிய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அதேபோல, வணிக நிறுவனங்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மின்-வர்த்தக அமைப்புகள் இந்த ஆபத்தான கிரீம்களை விற்கவோ, விநியோகிக்கவோ அல்லது விளம்பரம் செய்யவோ கூடாது என்று CDSCO கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.
அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளும் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இத்தகைய பொருட்கள் விற்பனை செய்யப்படாமல் இருப்பதை தீவிரமாகக் கண்காணித்து உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.